பெண் காவலர்களை அவதூறாக பேசியது, கஞ்சா வைத்திருந்தது உள்ளிட்ட வழக்குகளில் கைது செய்யப்பட்ட யூடியூபர் சவுக்கு சங்கர், தன் மீதான அனைத்து வழக்குகளையும் ரத்து செய்யக்கோரி மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, சவுக்கு சங்கர் மீது மீண்டும் குண்டர் சட்டம் போடப்பட்டுள்ளதாக அவரது தரப்பு வாதிட்டது.
சவுக்கு சங்கருக்கு நீதிமன்றம் பிணை வழங்கிய பின்னரும் அவர் மீது குண்டர் சட்டம் போடப்பட்டுள்ளதா என தமிழக அரசுக்கு கேள்வி எழுப்பிய தலைமை நீதிபதி, இந்த வழக்கு தொடர்பாக தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டார்.
மேலும் என்னென்ன வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன என்ற பட்டியலை தாக்கல் செய்யவும் சவுக்கு சங்கர் தரப்புக்கு தலைமை நீதிபதி உத்தரவிட்டார். தொடர்ந்து சவுக்கு சங்கர் மீது, மேல் நடவடிக்கைகளை எடுக்க இடைக்கால தடை விதித்த தலைமை நீதிபதி, குண்டர் சட்டம் உள்ளிட்ட வழக்குகளுக்கு எதிராக மேல்முறையீடு செய்யவும் அனுமதி வழங்கினார்.