தமிழ்நாடு

“பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வை ரத்து செய்தது செல்லும்” - உச்சநீதிமன்றம்

“பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வை ரத்து செய்தது செல்லும்” - உச்சநீதிமன்றம்

webteam

பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வை ரத்து செய்த தமிழக அரசின் ஆணை செல்லும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. 

கடந்த 2017 ஆம் ஆண்டு  நடைபெற்ற பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வில் 196 நபர்கள் முறைகேட்டில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக பாதிக்கப்பட்ட மாணவர்கள் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.  இதைத்தொடர்ந்து தேர்வினை  ரத்து செய்து தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டது. 

இதை எதிர்த்து பாதிக்கப்பட்ட மாணவர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தனர்.  முறைகேட்டில் ஈடுபட்ட மாணவர்கள் மீது மட்டும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற அவர்களது  கோரிக்கையை ஏற்று கொண்ட சென்னை உயர்நீதிமன்றம் தேர்வை ரத்து செய்த தமிழக அரசின் உத்தரவுக்கு தடை விதித்தது. இதனால் தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.

இதுகுறித்த விசாரணை முடிவுற்ற நிலையில், தமிழக அரசு பிறப்பித்த ஆணை செல்லும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.