மு.க.ஸ்டாலின் - ஆர்.என்.ரவி புதிய தலைமுறை
தமிழ்நாடு

“ஆளுநர் தரப்பில் சில முன்னேற்றங்களை எதிர்பார்க்கிறோம்” - உச்ச நீதிமன்றம்

முதலமைச்சரும், ஆளுநரும் சந்தித்து பேசி பிரச்னைகளை தீர்வுக்கு கொண்டுவர மீண்டும் வலியுறுத்தியுள்ள உச்சநீதிமன்றம், ஏன் எல்லா விவகாரத்திலும் நீதிமன்றம் தலையிட வேண்டும் என தமிழ்நாடு ஆளுநர் நினைக்கிறார்? என கேள்வி எழுப்பியுள்ளது.

PT WEB

மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் தர உத்தரவிடக்கோரி தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு தலைமை நீதிபதி அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தவுடன், அவசர
அவசரமாக மசோதாக்களை குடியரசுத் தலைவருக்கு ஆளுநர் அனுப்பி வைத்துள்ளதாக தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

மேலும் இது குறித்து தமிழக அரசு தரப்பில், “மசோதாக்களை குடியரசு தலைவருக்கு அனுப்பி வைப்பதை எப்படி ஏற்றுக்கொள்வது? முதலமைச்சர் கூட மசோதாக்கள் விவகாரத்தில் ஆளுநரை நேரில் சந்திக்க தயாராக இருக்கிறார்.” என்று கூறப்பட்டது. 

இதையடுத்து ஆளுநர் தரப்பில் ஏதாவது சில முன்னேற்றங்களை தாங்கள் எதிர்பார்ப்பதாக கூறிய தலைமை நீதிபதி, முதலமைச்சரும், ஆளுநரும் சந்தித்து பேசி பிரச்னைகளை தீர்வுக்கு கொண்டுவர, தாங்கள் மீண்டும் வலியுறுத்துகிறோம் என்று தெரிவித்தார். பின்னர் வழக்கு விசாரணை ஜனவரி மூன்றாவது வாரத்திற்கு ஒத்திவைக்கப்பட்டது.