தமிழ்நாடு

அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு எதிராக வழக்கு பதியாத காவல்துறைக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்!

அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு எதிராக வழக்கு பதியாத காவல்துறைக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்!

webteam

அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு எதிராக ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிய உத்தரவிட்டும் அதனை செயல்படுத்தாத காவல்துறை அதிகாரிகள் மேல் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை கோரிய மனு மீது, சென்னை குற்றப்பிரிவு காவல்துறையின் வேலை மோசடி பிரிவு பதிலளிக்க உச்சநீதிமன்றம் நோட்டீஸ் நோட்டீஸ் பிறப்பித்துள்ளது.

கடந்த 2011 - 2015 வரையிலான காலகட்டத்தில், போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி, வேலை வாங்கி தருவதாக கூறி பண மோசடி செய்ததாக, சென்னை அம்பத்துாரைச் சேர்ந்த கணேஷ்குமார், தேவசகாயம் உள்ளிட்டோர் சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையில் புகார் அளித்தனர்.

இதனடிப்படையில் செந்தில் பாலாஜி, அன்னராஜ், பிரபு மற்றும் சகாயராஜ் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. மேலும் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள, எம்.பி., - எம்.எல்.ஏ.,க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நிலுவையில் உள்ளது. இந்த வழக்குகளிலும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு வழக்கு விசாரணை சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இதற்கிடையே பாதிக்கப்பட்டவர்கள் பணம் கிடைத்துவிட்டதாக கூறியதையும், சமரசமாக போக விரும்புவதாகவும் கூறியதை ஏற்று நால்வர் மீதான வழக்கையும் ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

மேலும் செந்தில்பாலாஜி, அவரது அண்ணன் அசோக்குமார் மீதான குற்றச்சாட்டை நிரூபிக்க  போதிய ஆதாரம் இல்லை எனவும் தெரிவித்தது. உயர்நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பை ரத்து செய்யக் கோரி பொறியாளர் தர்மராஜ் என்பவர் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், “பணத்தைப் பெற்றுக் கொண்டு வேலை வழங்க முன்னாள் அமைச்சர் முடிவெடுத்ததன் காரணமாக தகுதியான மாணவர்கள் பணியில் சேர முடியவில்லை. எங்களது மதிப்பெண் குறைத்து காட்டப்பட்டது” என குற்றம் சாட்டப்பட்டது

இந்த மனு பல கட்டங்களாக விசாரிக்கப்பட்டு, “சமரசமாக செல்வது என்ற காரணத்திற்காக குற்ற வழக்குகளை விசாரிக்காமல் தவிர்க்க முடியாது” என்று கூறி பண மோசடி தொடர்பான வழக்கை ரத்து செய்த சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை ரத்து செய்வதாக தீர்ப்பளித்தது உச்சநீதிமன்றம். மேலும் இந்த முறைகேடு தொடர்பான வழக்கு மீண்டும் தொடக்கத்தில் இருந்து முழுமையாக விசாரிக்கவும், ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதியவும் உத்தரவிடப்பட்டது.

ஆனால் செந்தில் பாலாஜிக்கு எதிராக ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்கு பதியாமல் இருந்து வந்தனர். இந்நிலையில் வழக்கு பதியாத சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறை அதிகாரிகளுக்கு மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை கோரி  ஊழல் தடுப்பு அமைப்பு சார்பில் கார்த்திகை ராஜன் என்பவர் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

அந்த மனு, நீதிபதி ராமசுப்பிரமணியன் தலைமையிலான அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், “இந்த விவகாரத்தில் உச்சநீதிமன்ற உத்தரவை அமல்படுத்த தவறிய அனைத்து அதிகாரிகள் மீதும் அவமதிப்பு நடவடிக்கை எடுக்கவும், நேரில் ஆஜராகி விளக்கமளிக்கவும் உத்தரவிடவேண்டும்” என கோரப்பட்டது.

இதனைதொடர்ந்து நீதிபதிகள், அவமதிப்பு நடவடிக்கை கோரிய மனு மீது, பதிலளிக்க சென்னை சென்னை குற்றப்பிரிவு காவல்துறையின் வேலை மோசடி பிரிவு சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறை உதவி ஆணையர் சுரேந்திரன், சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறை ஆய்வாளர்கள் ரெஜினா மற்றும் கலாராணி ஆகியோருக்கு நோட்டீஸ் பிறப்பித்து உத்தரவிட்டதோடு வழக்கு மீதான விசாரணையை ஒத்திவைத்தனர்.