தமிழ்நாடு

எம்எல்ஏக்களை தகுதி நீக்கக்கோரும் வழக்கு: சபாநாயகருக்கு நோட்டீஸ்

எம்எல்ஏக்களை தகுதி நீக்கக்கோரும் வழக்கு: சபாநாயகருக்கு நோட்டீஸ்

Rasus

ஓபிஎஸ் உட்பட 11 எம்எல்ஏக்களை தகுதி நீக்கக்கோரும் வழக்கில் சபாநாயகருக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

அதிமுக பிளவுபட்டிருந்த போது முதலமைச்சராக பதவியேற்ற எடப்பாடி பழனிசாமி, தனது அரசின் மீது நம்பிக்கை கோரும் தீர்மானத்தை சட்டப்பேரவையில் கொண்டுவந்தார். அதற்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் உள்பட 11 எம்.எல்.ஏக்கள் வாக்களித்தனர். ஆகையால், அவர்கள் 11 பேரையும் தகுதி நீக்கக்கோரி திமுக கொறடா சக்கரபாணி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதேபோல அரசுக்கு எதிராக வாக்களித்ததாக ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கக்கோரி டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்களும் வழக்கு தொடர்ந்திருந்தனர். அவற்றை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் மனுக்களை தள்ளுபடி செய்தது. இந்த உத்தரவை எதிர்த்து திமுக கொறடா சக்கரபாணியும், டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்களும் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தனர். 

இருதரப்பினரும் தொடர்ந்த மேல்முறையீட்டு மனுக்கள் நீதிபதி ஏ.கே.சிக்ரி தலைமையிலான அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தன. அப்போது இதுதொடர்பாக பதிலளிக்க தமிழக சட்டப்பேரவை சபாநாயகருக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதுமட்டுமில்லாமல் ஓபிஎஸ் உள்ளிட்ட 11 எம்எல்ஏக்கள், சட்டப்பேரவை செயலாளர் ஆகியோரும் பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இவர்கள் அனைவரும் 4 வாரத்தில் பதில் கொடுக்கும்படியும் உத்தரவில் கூறப்பட்டுள்ளது.