தமிழ்நாடு

கன்னடம், தெலுங்கில் உச்சநீதின்ற தீர்ப்புகள் - தமிழில் இல்லையா? 

கன்னடம், தெலுங்கில் உச்சநீதின்ற தீர்ப்புகள் - தமிழில் இல்லையா? 

rajakannan

விரைவில் உச்ச நீதிமன்ற தீர்ப்பு விவரங்கள் ஆங்கிலம் மட்டுமின்றி 5 மாநில மொழிகளில் இணையதளத்தில் பதிவேற்றப்பட உள்ளது. இதில் தமிழ் இடம்பெறாதது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

உச்சநீதிமன்றம் வழங்கும் தீர்ப்புகளின் விவரங்கள் ஆங்கில மொழியில் உச்சநீதிமன்றத்தின் இணையதளத்தில் பதிவேற்றப்படுவது வழக்கம். இனி ஆங்கிலத்தோடு, ஹிந்தி, அஸாமீஸ், கன்னடம், ஒடியா, தெலுங்கு ஆகிய ஐந்து மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்பட்டு தீர்ப்புகள் பதிவேற்றப்படும். 

உலகிலேயே தீர்ப்பு விவரங்களை மாநில மொழிகளிலும் வெளியிடும் முதல் நாடு இந்தியா என்ற பெருமை கிடைக்கும். இதற்கான மென்பொருளை உச்சநீதிமன்றத்தின் மின்னணு மென்பொருள் பிரிவு உருவாக்கியுள்ளது. தலைமை நீதிபதியும் இந்த மென்பொருள் பயன்பாட்டுக்கு ஒப்புதல் தெரிவித்துள்ளார். ஒரு வாரத்திற்குள் இது நடைமுறைக்கு வரும் என சொல்லப்படுகிறது. 

தென்னிந்திய மொழிகளில் கன்னடமும், தெலுங்கும் இடம்பெற்றுள்ள நிலையில் தமிழ் இடம்பெறாதது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. எந்த மாநில உயர்நீதிமன்றங்களில் இருந்து அதிக எண்ணிக்கையிலான வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடுக்கு வருகிறதோ அந்த மாநில மொழிகளை அடிப்படையாகக் கொண்டே இந்த 5 மொழிகள் தேர்வு செய்யப்பட்டதாக உச்ச நீதிமன்ற வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதனிடையே, உச்சநீதிமன்ற தீர்ப்புகள் தமிழில் பதவியேற்றம் செய்யப்படாததற்கு விழுப்புரம் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார் கண்டனம் தெரிவித்துள்ளார்.

அத்துடன், தமிழில் உச்சநீதிமன்ற தீர்ப்புகளை மொழிபெயர்க்க வலியுறுத்தி நாடாளுமன்றத்தில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்துள்ளதாக தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.