அனிதா ராதாகிருஷ்ணனை கைது செய்யக்கூடாது என உயர்நீதிமன்றம் அமலாக்கத்துறைக்கு உத்தரவிட்டிருந்ததை உச்சநீதிமன்றமும் தற்போது உறுதிபடுத்தியுள்ளது.
கடந்த 2002-2006ஆம் ஆண்டில் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டு துறை அமைச்சராக இருந்த அனிதா ராதாகிருஷ்ணன் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை கடந்த 2006-ம் ஆண்டு வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியது. சட்டவிரோத பண பரிமாற்றம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த அமலாக்கப் பிரிவு, அனிதா ராதாகிருஷ்ணன் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு சொந்தமான 6 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பிலான சொத்துகளை முடக்கியது.
இந்நிலையில் தனக்கு எதிராக லஞ்ச ஒழிப்புத்துறை பதிவு செய்த வழக்கில் இருந்து தன்னை விடுவிக்கக்கோரி உச்சநீதிமன்றத்தில் அனிதா ராதாகிருஷ்ணன் மனு தாக்கல் செய்திருந்தார். முன்னதாக அமலாக்கத்துறை வழக்கை எதிர்த்து அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தொடுத்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், வழக்கு விசாரணையை நடத்தலாம் என்று கூறி, ஆனால் அமலாக்கத்துறை அவரை இடைக்காலமாக கைது செய்ய தடை விதித்தது.
இந்நிலையில் வழக்கு விசாரணைக்கு தடை கோரி அனிதா ராதா கிருஷ்ணன் தொடர்ந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நீதிபதி அஜய் ரஸ்தோஹி தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் இந்த விவகாரம் தொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்னும் சில நாட்களில் விசாரணைக்கு வரவுள்ளதால், அதுவரை அனிதா ராதாகிருஷ்ணன் கைது செய்ய வேண்டாம் என அமலாக்கத்துறைக்கு உத்தரவிட்டனர். ஏற்கனவே இந்த வழக்கில் அடுத்த விசாரணை வரை அனிதா ராதாகிருஷ்ணனை கைது செய்யக்கூடாது என உயர்நீதிமன்றம் அமலாக்கத்துறைக்கு உத்தரவிட்டிருந்ததை உச்சநீதிமன்றமும் தற்போது உறுதிபடுத்தியுள்ளது.
இதையும் படிக்கலாமே: ”இந்தி திணிப்பு எதிர்ப்பு தீர்மானம் ஏன்?” - முதல்வரின் விளக்கமும்.. தலைவர்களின் உரையும்!