கவிதா புதியதலைமுறை
தமிழ்நாடு

மீண்டும் குறுக்கிட்ட அமலாக்கத்துறை தரப்பினர்.. கோபமடைந்த நீதிபதிகள்.. கவிதாவுக்கு கிடைத்தது ஜாமீன்!

PT WEB

டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் பி ஆர் எஸ் கட்சியின் மூத்த தலைவர் கவிதாவிற்கு பிணை வழங்கி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

டெல்லி புதிய மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் கடந்த மார்ச் 15ம் தேதி தெலுங்கானா முன்னாள் முதல்வர் சந்திரசேகரராவின் மகள் கவிதா அமலாக்கத்துறை அதிகாரிகளால் ஹைதராபாத்தில் வைத்து கைது செய்யப்பட்டார்.

டெல்லி அழைத்துவரப்பட்ட கவிதாவிடம் அமலாக்கத்துறையினர் விசாரணை நடத்தியதற்கு பிறகு நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டு பின்னர் திகார் சிறையில் அடைக்கப்பட்டார்.

இதே விவகாரத்தில் சிபிஐ தரப்பும் வழக்கு பதிவு செய்து கவிதாவை கைது செய்து இருந்தது. இந்த இரண்டு விசாரணை அமைப்புகளின் வழக்குகளிலும் தனக்கு பிணை வழங்க வேண்டும் என்று கவிதா தொடர்ந்து இருந்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் பி.ஆர்.கவாய் மற்றும் கே.வி.விஸ்வநாதன் ஆகியோர் அடங்கிய அமர்வில் 2 வாரங்களுக்கு முன்பு விசாரணைக்கு வந்தது.

மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் முகுல் ரோத்தகி, “மதுபானக் கொள்கை தொடர்பான வழக்கில் ஒரு பெண்ணாக இருக்கும் கவிதா கடந்த ஐந்து மாதங்களாக சிறையில் உள்ளார். இதனை நீதிமன்றம் கருத்தில் கொள்ள வேண்டும். மேலும் வழக்கில் பிணை வழங்க அனைத்து முகாந்திரமும் உள்ளது. ஆனால் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் மணீஷ் சிசோடியா ஆகியோரின் வழக்குகளை காரணம் காட்டி கவிதாவுக்கு பிணை மறுக்கப்படுகிறது ”என வாதங்கள் முன் வைத்தார். அவரது இந்த வாதங்களை பதிவு செய்து கொண்ட உச்சநீதிமன்றம் சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை வரும் 20ஆம் தேதிக்குள் இந்த விவகாரத்தில் பதிலளிக்க வேண்டும் என நோட்டீஸ் பிறப்பித்து வழக்கின் விசாரணையை ஒத்தி வைத்தனர்.

இந்நிலையில், இந்த வழக்கின் மீதான விசாரணை 20 ஆம் தேதி மீண்டும் விசாரணைக்கு வந்த போது ஏற்கனவே சிபிஐ தனது பதிலை அளித்து விட்டதாகவும் அதற்கு அமலாக்கத்துறை கூடுதல் பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய வேண்டிய இருப்பதாகவும் எனவே வழக்கின் விசாரணையை ஒருவாரத்திற்கு ஒத்திவைக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார். இதனை அடுத்து வழக்கின் விசாரணையை நீதிபதிகள் ஆகஸ்ட் 27ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

இந்நிலையில், இந்த வழக்கு விசாரணை இன்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பி ஆர் காவாய் மற்றும் கே வி விஸ்வநாதன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரிக்கப்பட்டது .கவிதா சார்பில் ஆஜரான குற்ற வழக்கறிஞர் ரோத்தகி, “ஏற்கனவே இந்த விவகாரத்தில் தன்னைப் போலவே மற்றொரு குற்றம் சாட்டப்பட்ட நபரான மணிஷ் சிசோடியாவிற்கு நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது. மேலும் தன் தரப்பு விசாரணை சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை நிறைவு செய்து விட்டது. எனவே தனக்கு பிணை வழங்க வேண்டும்” என கவிதா சார்பில் வாதங்கள் முன்வைக்கப்பட்டது

மேலும் தான் ஒரு சட்டமன்ற உறுப்பினராக இருப்பதாகவும் எனவே தான் வெளிநாட்டிற்கு தப்பிச் செல்வதற்கான வாய்ப்பு இல்லை என்றும் மேலும் குற்றவியல் நடைமுறை சட்டங்கள் மற்றும் சட்ட விரோத பண பரிமாற்ற தடுப்புச் சட்டம் ஆகியவற்றின் பெண்களுக்கு என்று சலுகைகள் இருப்பதாகவும் ஆனால் அவற்றையெல்லாம் உயர்நீதிமன்றம் கருத்தில் கொள்ள தவறிவிட்டது என்றும் வாதங்களை முன்வைத்தார்.

உச்சநீதிமன்றம்

ஆனால் அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த அமலாக்கத்துறை தரப்பு மூத்த வழக்கறிஞர், “ இந்த விவகாரத்தில் கவிதா ஏற்கனவே தனது செல்போனை அழித்திருக்கின்றார் மற்ற பிற ஆதாரங்களையும் அளித்ததோடு சாட்சியங்களையும் மிரட்டி இருக்கின்றார் . இரண்டு மூன்று செல்போன்களை அவர் பயன்படுத்தி இருக்கிறார், அவற்றைத் தொடர்ந்து மாற்றிக் கொண்டே இருந்திருக்கிறார்” என அமலாக்கத்துறை சார்பில் தெரிவித்த போது, “அவையெல்லாம் ஒருவருடைய தனிப்பட்ட விவகாரம் இங்க இருக்கும் நிறைய வழக்கறிஞர்கள் இரண்டு மூன்று செல்போன்கள் வைத்திருக்கிறார்கள் எனக்கு கூட எனது பள்ளி கல்லூரி குழுவில் இருந்து வரக்கூடிய குறுஞ்செய்திகளை தொடர்ந்து அளிக்கும் பழக்கம் இருக்கின்றது அது ஒவ்வொருவரது தனிப்பட்ட விவகாரம் இது வழக்கின் விசாரணைக்கு எவ்வாறு தொடர்புடையது என்பதை தான் நீங்கள் சொல்ல வேண்டும்”. என நீதிபதிகள் திட்டவட்டமாக கூறினார்கள்.

தொடர்ந்து உத்தரவுகளை பிறப்பிக்க நீதிபதிகள் முயற்சித்த போது அமலாக்கத்துறை சார்பில் மீண்டும் குறிப்பிடப்பட்டது . அப்போது கடும் கோபமடைந்த நீதிபதிகள் ”நாங்கள் இதை உங்களுக்கு எச்சரிக்கையாகவே சொல்கின்றோம். பிணை மீதான விசாரணையின் போது கீழமை நீதிமன்றங்களில் நடைபெறுவது போன்ற விரிவான வாதங்கள் என்பது தவிர்க்கப்பட வேண்டும். உங்களது பிரமாண பத்திரத்தில் இந்த வழக்கின் விசாரணை தற்போதைக்கு முடியாது என்று நீங்கள் தான் கூறியிருக்கிறீர்கள் அப்படி இருக்கும்போது உங்களது எந்த ஒரு வாதத்தையும் நாங்கள் ஏற்க விரும்பவில்லை. உங்களது விசாரணை முறை என்பதை நியாயமான முறையில் மேற்கொள்ளப்படுகிறது என்ற கேள்வியை நாங்கள் எழுப்ப விரும்புகிறோம். அதே போல விசாரணை அமைப்புகள் ஒரு தலை பட்சமாக நடந்து கொள்ள முடியாது ”எனவும் நீதிபதிகள் கருத்து தெரிவித்துவிட்டு தொடர்ந்து உத்தரவை வாசித்தனர்.

”விசாரணை என்ற பெயரில் ஒருவருக்கு தண்டனை வழங்குவதை ஏற்க முடியாது என ஏற்கனவே பல தருணங்களில் இந்த நீதிமன்றம் கூறியிருக்கிறது. பெண்களுக்கு என்று சில சலுகைகள் விசாரணை மற்றும் பிணை வழங்குதல் ஆகியவற்றில் இருக்கும்போது ஏற்கனவே சில வழக்குகளில் அது நீதிமன்றத்தால் உறுதிப்படுத்தப்பட்டு இருக்கும் நிலையில் தனி நீதிபதி தனது பிணையை மறுக்கும் உத்தரவில் தவறாக கையாண்டிருக்கிறார்.”என உச்சநீதிமன்ற நீதிபதிகள் உத்தரவில் குறிப்பிட்டுள்ளனர்.

இதன்படி, கவிதாவிற்கு பிணை வழங்குவதாகவும் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ வழக்கு ஆகிய இரண்டிற்கும் தலா 10 லட்சம் ரூபாய் பிணைத்தொகை செலுத்த வேண்டும், கடவுச்சீட்டை ஒப்படைக்க வேண்டும், விசாரணைக்கும் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்,எக்காரணத்தைக் கொண்டும் சாட்சியங்களை கலைக்க கூடாது... உள்ளிட்ட நிபந்தனைகள் விடுக்கப்பட்டது.