உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பில் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியின் தேர்வை அங்கீகரிக்கவில்லை என ஒ.பி.எஸ் ஆதரவாளர் புகழேந்தி தெரிவித்தார்.
முன்னாள் முதல்வர் ஒ.பி.எஸ் ஆதரவாளர் புகழேந்தி சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, அதிமுக வழக்கு தொடர்பாக உச்சநீதிமன்றம் தீர்ப்பில் கட்சி முழுவதுமாக எடப்பாடி அணிக்கு போய்விட்டதாக நினைக்கிறார்கள். அதில் உண்மையில்லை, திட்டமிட்டு பரப்பபட்டதாக கூறினார். நீதிமன்றத்தின் தீர்ப்பில் முழுமையான நகலில் 38 பகுதியில் சில தகவல்கள் சொல்லப்பட்டு இருக்கிறது. அதில் பொதுக்குழுவில் எடப்பாடி தேர்வு குறித்த தீர்மானம் குறித்து உச்சநீதிமன்றம் எதுவும் சொல்லவில்லை. எனவே இடைக்கால பொதுச்செயலாளர் தேர்வு குறித்து நீதிமன்றம் அங்கீகரிக்கவில்லை என குறிப்பிட்டார்.
ஏற்கனவே பொதுச்செயலாளர் பதவி ஜெயலலிதாவுக்கு என்று எடுத்த முடிவுக்கு மாறாக செயல்படுவதை நாங்கள் நீதிமன்றம் செல்ல இருப்பதாகவும், கட்சி தொண்டர்கள் தனி தனியாக இது தொடர்பாக வழக்கு தொடுக்க இருப்பதாக தெரிவித்தார்.
முழுமையான தகவல் தெரியாமல் திருமாவளவன் பழனிச்சாமிக்கு பாராட்டு தெரிவிப்பது ஏற்புடையதல்ல என்றார். இடைத்தேர்தலில், ஆளும் கட்சியினர் ஏன் பழனிச்சாமி உடன் மோதல் போக்கு, வாக்குவாதம் நடக்கவில்லை என கேள்வி எழுப்பினார். தீய சக்தியிடம் இரட்டை இலை கிடைத்துவிட்டது. இதனால் இடைத் தேர்தலில் தோல்வி தான் ஏற்படும். 2 ம் இடம் கூட கிடைக்க வாய்ப்பில்லை என்றார். தேர்தல் ஆணையத்திடம் பழனிச்சாமி தரப்பு சென்றாலும் எந்த பலனும் அவர்களுக்கு இருக்காது. சிவில் நீதிமன்றத்தில் இனி அடுத்த கட்ட நடவடிக்கை இருக்கும். மேலும் ஒருதலை பட்சமாக செயல்பட்ட அவை தலைவர் தமிழ் மகேன் உசேன் மீது தேர்தல் ஆணையத்தில் புகார் தெரிவிக்க இருப்பதாக தெரிவித்தார்.