தமிழ்நாடு

ஐ.டி பெண் ஊழியர் கொலை வழக்கு : ஆயுள் தண்டனையை உறுதி செய்தது உச்சநீதிமன்றம்

ஐ.டி பெண் ஊழியர் கொலை வழக்கு : ஆயுள் தண்டனையை உறுதி செய்தது உச்சநீதிமன்றம்

webteam

சென்னை அருகே கடந்த 2014ஆம் ஆண்டு ஐ.டி பெண் ஊழியர் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் மூன்று குற்றவாளிகளுக்கு உச்சநீதிமன்றம் ஆயுள் தண்டனையை உறுதி செய்தது.

சென்னையை அடுத்த சிறுசேரியில், 2014-ம் ஆண்டு பிப்ரவரி 13-ம் தேதி ஐ.டி. பெண் ஊழியர் உமா மகேஸ்வரி கடத்தி படுகொலை செய்யப்பட்டார். இந்தக் கொலை வழக்கில், மேற்கு வங்கத்தைச் சேர்ந்த உத்தம் மண்டல், ராம் மண்டல், உஜ்ஜல் மண்டல் ஆகிய மூன்று பேரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். அவர்களுக்கு, காஞ்சிபுரம் மாவட்ட மகளிர் நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்தது.
 இந்தத் தீர்ப்பை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மூன்று பேர் தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் ஆயுள் தண்டனையை உறுதி செய்தது.

இதையடுத்து குற்றவாளிகள் மூன்று பேரின் தரப்பிலிருந்தும் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மேல்முறையீட்டில் இன்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் யோகேஷ் கன்னா, குற்றவாளிகளுக்கு வழங்கப்பட்ட ஆயுள் தண்டனையை உறுதி செய்ய வேண்டும் என வாதிட்டார். 

தகுந்த ஆதாரங்களை கொண்டுதான் கீழமை நீதிமன்றமும், உயர் நீதிமன்றமும் தீர்ப்பு வழங்கியதை சுட்டிக்காட்டினார். 
இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் குற்றவாளிகளுக்கு வழங்கப்பட்ட ஆயுள் தண்டனையை உறுதி செய்து உத்தரவிட்டனர்.