கூடங்குளம் அணு உலையில் அணுக்கழிவுகளை பாதுகாப்பாகக் கையாள என்னென்ன நடைமுறைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என ஆய்வறிக்கை தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கூடங்குளம் அணு உலையில் அணுக்கழிவுகள் சரியாகக் கையாளாமல், உரிய பாதுகாப்பு நடவடிக்கைகளையும் பின்பற்றாமல் இருப்பதாக கூறி பூவுலகின் சுந்தர்ராஜன் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அந்த மனுவில் அணுக் கழிவுகளை பாதுகாப்பாக அகற்றாமல் கடலில் கொட்டப்படுவதாகவும் இதனால் மிகப்பெரிய சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படும் எனவும், எனவே உரிய பாதுகாப்பு முறைகள் பின்பற்றப்படும் வரை அணு உலையில் மின் உற்பத்திக்கு தடைவிதிக்கவும் கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது.
இந்த மனுவை இன்று விசாரித்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.மனுதாரர் சார்பாக பிரசாந்த் பூஷணும், மத்திய அரசின் சார்பில் துஸார் மேத்தாவும் ஆஜராகினர். அணுக் கழிவுக்ளை சரியாக கையாளாததால்தான் புகுசிமா அணு உலையில் வெடிப்பு ஏற்பட்டது, அது போல்தான் கூடங்குளம் அணு உலையிலும் அணுக்கழிவுகள் அலட்சியமாக கையாளப்படுவதாக வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் கூறினார். இதற்கு மறுப்பு தெரிவித்த மத்திய அரசு வழக்கறிஞர் சரியான பாதுகாப்பு நடைவடிக்கைகள் முழுமையாக செயல்படுத்தப்படுவதாக தெரிவித்தார். வாதங்களைக் கேட்ட நீதிபதிகள் கூடங்குளம் அணு உலையில் அணுக்கழிவுகளை பாதுகாப்பாக கையாள என்ன என்ன நடைமுறைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என வரும் ஜூலை முதல் வாரத்திற்குள் அணு உலை பாதுகாப்பு முகமை உச்சநீதிமன்றத்தில் ஆய்வறிக்கை தாக்கல் செய்ய உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு உத்தரவு பிறப்பித்து, வழக்கை ஜூலை மாதத்திற்கு ஒத்திவைத்தது.