பாம்பனில் முன்னாள் அமைச்சர் மணிகண்டனின் ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது ‘’அதிமுகாவிற்கு வேலை செய்ய மாட்டோம், பாஜக தோல்வியடையும், அதிமுகவும் தோல்வியடையும்’’ என்று தொண்டர்கள் கோஷமிட்டு தரையில் உருண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வருகின்ற ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதையடுத்து அனைத்துக் கட்சிகளும் தொகுதி பங்கீடு வேட்பாளர் அறிவிப்பு உள்ளிட்ட வேலைகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் அதிமுக கூட்டணியில், ராமநாதபுரம் சட்டமன்ற தொகுதியை பாஜகவிற்கு ஒதுக்கியுள்ளது. இந்த தொகுதி அதிமுகவிற்கு அதுவும் முன்னாள் அமைச்சர் மணிகண்டனுக்கு ஒதுக்கப்படும் என்று எதிர்பார்ப்பு நிலவி வந்தது.
தொகுதி அறிவிப்பால் ஆத்திரமடைந்த மணிகண்டனின் ஆதரவாளர்கள், ’’பாம்பனில் அதிமுகவிற்கு வேலை செய்ய மாட்டோம், பாஜகவிற்கு வாக்களிக்க மாட்டோம், பாஜக தோல்வி அடையும், அதிமுகாவும் தோல்வி அடையும்’’ என்ற கோஷங்கள் எழுப்பி தரையில் உருண்டு புரண்டு போராட்டம் நடத்தினர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது