சுனிதா வில்லியம்ஸ் pt web
தமிழ்நாடு

“பூமிக்குப் பாதுகாப்பாக திரும்புவோம்” - விண்வெளியில் இருந்து நம்பிக்கை தெரிவித்த சுனிதா வில்லியம்ஸ்

விண்வெளியில் இருந்து பாதுகாப்பாக பூமிக்குத் திரும்புவோம் என சுனிதா வில்லியம்ஸ், வில்மோர் இருவரும் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். அவர்கள் பயணித்த ஸ்டார்லைனர் விண்கலனில் சில கோளாறுகள் கண்டறியப்பட்டதால் தாமதம் ஏற்பட்டு வருகிறது.

PT WEB

கடந்த ஜூன் 5ஆம் தேதி இந்திய வம்சாவளியை சேர்ந்த சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகிய இருவரும் ஸ்டார்லைனர் விண்கலத்தில் அமெரிக்காவின் கென்னடி விண்வெளி மையத்திலிருந்து சர்வதேச விண்வெளி மையம் சென்றனர். ஜூன் 7ஆம் தேதி ஸ்டார் லைனர் சர்வதேச மையத்தை அடைந்தது.

ஆனால் இந்த பயணத்தை தொடங்குவதற்கு முன்னரே பல்வேறு குளறுபடிகள் ஏற்பட்டன. குறிப்பாக இரண்டு, மூன்று முறை தொழில்நுட்ப கோளாறு காரணமாக பயணம் ஒத்திவைக்கப்பட்டது. இப்படி இருக்கையில் தற்போது சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து சுனிதா வில்லியம்ஸையும், வில்மோரையும் மீண்டும் பூமிக்கு அழைத்து வருவதில் சிக்கில் ஏற்பட்டிருக்கிறது.

ஜூன் 7ஆம் தேதி சர்வதேச விண்வெளி மையத்திற்கு சென்ற இருவரும், ஜூன் 14ஆம் தேதி மீண்டும் பூமிக்கு திரும்பியிருக்க வேண்டும். ஆனால் ஸ்டார்லைனரில் ஏற்பட்ட ஹீலியம் கசிவு மற்றும் உந்து விசை கருவியில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு ஆகியவை இந்த பயணத்தை மேலும் ஒரு வாரம் தாமதமாக்கியது. இதன்படி ஜூன் 26ஆம் தேதி இருவரும் பூமிக்கு திரும்பியிருக்க வேண்டும். ஆனால் தொழில்நுட்ப கோளாறுகள் இன்னும் சரி செய்யப்படாததால், இன்று வரை இருவரும் பூமிக்கு திரும்பாமல் சர்வதேச விண்வெளி மையத்திலேயே சிக்கியுள்ளனர்.

இந்நிலையில் “விண்வெளியில் இருந்து பாதுகாப்பாக பூமிக்குத் திரும்புவோம். தங்களை போயிங் விண்கலம் பத்திரமாக பூமிக்கு கொண்டு வரும்” என்று சுனிதா வில்லியம்ஸ், வில்மோர் இருவரும் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். மேலும் இந்த மாத இறுதியில் ஸ்டார் லைனரில் ஏற்பட்டுள்ள கோளாறுகள் சரி செய்யப்பட்டும் என்று போயிங் நிறுவனம் தெரிவித்திருக்கிறது.