சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே உள்ள ராமநாயக்கன் பாளையம் 10 ஏக்கர் காலனி அடுத்த செங்கேணிகுட்டை பகுதியைச் சேர்ந்த சகோதரர்கள் கிருஷ்ணன், (71) கண்ணையன் (75). இவர்களுக்கு கடந்த ஜூன் மாதம் அமலக்கத் துறையில் இருந்து கருப்பு பண பரிமாற்றம் தொடர்பாக நேரில் ஆஜராகும் படி சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. அதில் இருவரின் சாதியை குறிப்பிட்டு சம்மன் அனுப்பியுள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த இருவரும் வழக்கறிஞர்களுடன் சென்னையில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு வங்கி கணக்கு, ஆதார் உள்ளிட்ட ஆவணங்களோடு ஆஜராகினர்.
அப்போது எதன் அடிப்படையில் இருவருக்கும் சம்மன் அனுப்பப்பட்டது என வழக்கறிஞர்கள் தரப்பில் கேட்டதாக கூறப்படுகிறது. அதற்கு அமலாக்கத்துறை அதிகாரிகள் அலட்சியமாக பதில் அளித்ததோடு, வழக்கறிஞர்களை மிரட்டும் வகையில் பேசியதாக கூறப்படுகிறது. இதை தொடர்ந்து மூத்த விவசாயிகளுடன் சென்ற வழக்கறிஞர் செல்லதுரை தரப்பினர் டிஜிபி அலுவலகத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் மீது புகார் அளித்துள்ளனர்.
இதுகுறித்து முதியவர் கிருஷ்ணனிடம் கேட்டபோது, “எங்களது குடும்பத்தாருக்கு ஆறரை ஏக்கர் நிலம் இருக்கிறது. அதனை அபகரிக்கும் நோக்கில் பாஜக-வை சேர்ந்த சேலம் கிழக்கு மாவட்ட செயலாளர் குணசேகரன் குடும்பத்தார் முயற்சி செய்கின்றனர். எங்களை ஜாதி ரீதியாக பேசி நிலத்தை பிடுங்க வேண்டும் என்ற நோக்கில் குணசேகரன் குடும்பத்தினர் செயல்படுகின்றனர். நிலம் தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில், தங்கள் மீது பொய்யான புகாரை அமலாக்கத் துறையில் தெரிவித்து அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது.
அமலாக்க துறையில் எங்களிடம் உள்ள ஆவணங்களை சமர்ப்பித்தோம். ஏழ்மை நிலையில் உள்ள எங்களுக்கு கருப்பு பணம் எங்கிருந்து வரும், எங்களுடைய வங்கி கணக்கு உள்ளிட்ட விவரங்களையும் தெரிவித்துள்ளோம். குணசேகரன் பாஜக பிரமுகர் என்பதால் இவ்வாறு செயல்படுகிறார்” என்று குற்றம் சாட்டினார்.
இது குறித்து பேசிய அவர்களது வழக்கறிஞர் செல்லதுரை, ”இரு தரப்பினருக்கும் இடையே வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், அமலாக்கத்துறை மூலம் பண மோசடி தொடர்பாக கிருஷ்ணன் மற்றும் கண்ணையன் ஆகிய இருவரும் நேரில் ஆஜராகும் படி அமலாக்கத்துறை சமன் அனுப்பியது. இது தொடர்பாக அனைத்து ஆவணங்களுடன் அமலாக்கத்துறை அலுவலகத்தில் சென்றபோது முறையான விளக்கம் அளிக்காம் தங்களை வெளியே அனுப்பியதாகவும் தெரிவித்தனர் இதுகுறித்து சென்னை டிஜிபி அலுவலகத்தில் புகார் அளித்துள்ளோம்” என்றார்.
இந்நிலையில், அமலாக்கத்துறை அதிகாரிகளின் இந்த செயலை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் X வலைதள பக்கத்தில் தனது கண்டனத்தை பதிவிட்டுள்ளார். அதில்,
”சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகேயுள்ள இராமநாய்க்கன் பாளையத்தைச் சார்ந்த #கிருஷ்ணன், #கண்ணையன் ஆகிய இருவருக்கும் சென்னை அமலாக்கத் துறையினர் 'சம்மன்' அனுப்பியுள்ளனர். அதற்கான அஞ்சல் உறையில் 'இந்து - பள்ளன்' என சாதிப் பெயரைக் குறிப்பிட்டுள்ளனர். இது, இதுவரை இல்லாத, அதிர்ச்சியளிக்கக் கூடிய ஒரு புதிய நடைமுறையாக உள்ளது. அமலாக்கத் துறையின் இந்த இழிவான போக்கினை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மிக வன்மையாகக் கண்டிக்கிறது.
கிருஷ்ணன், கண்ணையன் ஆகியோருக்குச் சொந்தமான 6.5 ஏக்கர் நிலத்தைப் பறிப்பதற்கு முயற்சித்து வருகிற குணசேகரன் என்கிற பாஜக மாவட்ட பொறுப்பாளரின் தூண்டுதலில் இது நடந்திருப்பதாகத் தெரியவருகிறது. ஏழை சிறு விவசாயிகளுக்கு சம்மன் அனுப்பிய அமலாக்கத் துறையினரையும் பாஜக பொறுப்பாளரையும் வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்து விசாரணை நடத்திட வேண்டுகிறோம்” என்று பதிவிட்டுள்ளார்.