தமிழ்நாடு

உக்கிரமாகிறது கோடை வெயில் - தமிழகத்தில் 3 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை உயரும்

ஜா. ஜாக்சன் சிங்

தமிழ்நாட்டில் அடுத்த இரண்டு நாட்களுக்கு ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, தெற்கு கடலோர தமிழக மாவட்டங்கள் மற்றும் உள் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் திங்கள்கிழமை இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக் கூடும் என வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், மே 3 முதல் 5-ம் தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்காலில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக் கூடும் என்றும் கூறப்பட்டுள்ளது.

தமிழகத்தில் அடுத்த 2 நாள்களுக்கு ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பைவிட 2 டிகிரி முதல் 3 டிகிரி செல்சியல் வரை அதிகரிக்கக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமை காலை எட்டரை மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில், அதிகபட்சமாக கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டையில் 3 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது.