தமிழ்நாடு

தேனி முதல் கிருஷ்ணகிரி வரை.. தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் மண்ணை குளிர்வித்த மழை!

தேனி முதல் கிருஷ்ணகிரி வரை.. தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் மண்ணை குளிர்வித்த மழை!

webteam

தேனி, கிருஷ்ணகிரி, சேலம், ஈரோடு, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் நேற்று மாலை பெய்த மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

தேனி மாவட்டம்:

தேனி மாவட்டம் பெரியகுளம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த ஒரு மாதமாக பகல் நேரத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்ததோடு இரவு நேரத்திலும் வெப்பத்தில் தாக்கம் அதிகரித்துக் காணப்பட்டது. இதனால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர். இந்நிலையில், நேற்று மாலை பெரியகுளம் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.

இதையடுத்து பெரியகுளம் அதனை சுற்றியுள்ள கெங்குவார்பட்டி, காமக்கப்பட்டி, தேவதானப்பட்டி, எ.புதுப்பட்டி, சில்வார்பட்டி, தாமரைக்குளம், வடுகபட்டி, லட்சுமிபுரம் உள்ளிட்ட பகுதிகளில் இரவு 9 மணி முதல் பரவலாக லேசான சாரல் மழை பெய்யத் துவங்கியது. இதனைத் தொடர்ந்து பலத்த காற்று இடி மின்னலுடன் கூடிய கனமழை பல இடங்களில் பெய்தது.

கிருஷ்ணகிரி மாவட்டம்

அதேபோல், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக பகல் நேரங்களில் கடும் வெயில் வாட்டிய நிலையில், நேற்று பகல் நேரத்தில் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. இதையடுத்து கிருஷ்ணகிரி ராயக்கோட்டை சாலை, மேம்பாலம், பெங்களூர் சாலை, ரவுண்டானா, லண்டன் பேட்டை, போன்ற இடங்களில் காற்றுடன் லேசாக மழை பெய்தது. இந்த திடீர் மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

சேலம் மாவட்டம்:

சேலத்தில் பகல் நேரத்தில் கடும் வெயில் வாட்டி வதைத்த நிலையில், நேற்று மாலை மாநகர பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. இதில், அம்மாபேட்டை பொன்னம்மாபேட்டை குச்சிபாளையம் அஸ்தம்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் மிதமான மழை பெய்தது.

விருதுநகர் மாவட்டம்:

ராஜபாளையம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளான தளவாய்புரம், முகவூர், சேத்தூர், கிருஷ்ணாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் நேற்ற மாலை பலத்த காற்றுடன் பரவலாக மழை பெய்தது. இந்த மழை காரணமாக நகரில் குளிர்ச்சியான சூழல் நிலவுவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

கோவை ஈரோடு மாவட்டம்

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இடி மின்னலுடன் சாரல் மழை பெய்தது. அதேபோல், ஆரணி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சாரல் மழை பெய்தது. இதனால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியது. இந்நிலையில், ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை பெய்தது.

திருப்பூர் மாவட்டம்

கோடைக்காலம் துவங்கியதை அடுத்து காங்கேயம் சுற்றுவட்டார பகுதிகளில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. இந்நிலையில், நேற்று நள்ளிரவில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்தது. இரவு 11 மணியளவில் இலேசான தூரலுடன் தொடங்கிய மழை சற்று நேரத்தில் வலுப்பெற்று பலத்த சாரல் மழையாக பெய்ய துவங்கியது. சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக பெய்த மழையால் மழை நீர் சாலைகளில் பெருக்கெடுத்து ஓடியது. நகரின் தாழ்வான பகுதிகளான மெயின்ரோடு, கரூர் ரோடு, புது விநாயகர் கோவில் வீதி, ராஜாஜி வீதி, பழைய கோட்டை ரோடு உள்ளிட்ட பகுதி சாலைகளில் மழைநீர் குளம் போல தேங்கியதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இருப்பினும் கோடையில் பெய்த மழையால் குளுமையான சூழல் நிலவியது.

சென்னையிலும் மழை..

சென்னையில் இன்று அதிகாலை 4 மணியளவில் லேசாக மழை பெய்தது. சில இடங்களில் தண்ணீர் தேங்கும் அளவிற்கு மழை பெய்தது. ஒரு மாதத்திற்கு மேலாக கடுமையான வெப்பம் நிலவி வந்த நிலையில், இந்த மழை காரணமாக வெப்பம் சற்றே தணிந்தது.