சுருக்குமடி வலையை பயன்படுத்தி நடுக்கடலில் மீன் பிடித்த படகை பறிமுதல் செய்ய முயற்சித்த மீன்வளத்துறை மற்றும் காவல் படையினரும் சென்ற படகை புதுவை மீனவர்கள் நடுக்கடலில் சிறைபிடித்தனர்.
தமிழகத்தில் சுருக்குமடி வலையை பயன்படுத்தி மீன் பிடிக்கக் கூடாது என தடை உள்ளது. அதுமட்டுமில்லாமல் மீன்பிடி ஒழுங்குமுறை சட்டத்தின் அடிப்படையில் மட்டுமே மீனவர்கள் மீன் பிடிக்க வேண்டும் என தமிழக அரசு அறிவித்து கடலில் தொடர்ந்து மீன்வளத்துறை அதிகாரிகளும் கடலோர காவல்படையும் இணைந்து ரோந்து பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இந்நிலையில், தாழங்குடா நல்லவாடு கடல் பகுதியில் புதுவை மாநிலத்தைச் சேர்ந்த மீனவர்கள் சுருக்கு மடி வலைகளை பயன்படுத்தி மீன் பிடிப்பதாக மீனவர்கள் மூலம் புகார் வந்தது. அதன் அடிப்படையில் மீன்வளத்துறை அதிகாரிகளும் கடலோர காவல்படையும், சுருக்குமடி வலையை பயன்படுத்தி மீன்பிடித்த படகை பறிமுதல் செய்ய முயற்சித்தனர். அப்போது புதுவை மாநில மீனவர்கள் மற்ற மீனவர்களுக்கு தகவல் கொடுத்தனர்.
இதையடுத்து சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் படகுகளில் வந்த மீனவர்கள், தமிழகத்தைச் சேர்ந்த மீன்வளத்துறை அதிகாரிகளையும் கடலோர காவல்படையினரையும் சிறைபிடித்தனர். அதிகாரிகளின் படகை கட்டி இழுத்து புதுவைக்கு கொண்டுசெல்ல முயற்சித்தனர். இதனால் அங்கு பதற்றம் ஏற்பட்டது. இதனையடுத்து தமிழக அதிகாரிகள் புதுவை படகை பறிமுதல் செய்யும் முயற்சியை கைவிட்டதையடுத்து புதுவை மீனவர்கள் அங்கிருந்து சென்று விட்டனர்.
இதனால் கடல் பகுதியில் பதற்றமான சூழல் உள்ளது. இது சம்பந்தமாக கடலோர காவல் படையும் மீன்வளத்துறை அதிகாரிகளும் விசாரணை மேற்கொண்டு சம்பந்தப்பட்டவர்கள் மீது வழக்குப்பதிவு செய்ய திட்டமிட்டுள்ளனர். இச்சம்பவம் கடலூர் கடல் பகுதியில் பதற்றமான சூழலை ஏற்படுத்தி உள்ளது.