தமிழ்நாடு

வருவாய் பங்கீட்டு முறை சட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி கரும்பு விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

வருவாய் பங்கீட்டு முறை சட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி கரும்பு விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

Sinekadhara

வருவாய் பங்கீட்டு முறை சட்டத்தை ரத்துசெய்து பரிந்துரை விலையை அறிவித்து வழங்கவும், ஒரு டன் கரும்புக்கு 4000 ரூபாய் வழங்க வலியுறுத்தியும் தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

வருவாய் பங்கீட்டு முறை சட்டத்தை ரத்துசெய்ய வலியுறுத்தி தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம், திருச்சி, சேலம், விழுப்புரம் என தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து 500க்கும் மேற்பட்ட விவசாயிகள் இதில் கலந்துகொண்டனர்.

கடந்த பத்து வருடங்களாக கரும்பு விவசாயிகளுக்கு கொடுக்கவேண்டிய நிலுவைத் தொகை, கொள்முதல் விலை ஆகியவற்றை கொடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறி முழக்கங்கள் எழுப்பினர். மேலும் தமிழகத்தில் மூடப்பட்டுள்ள அரசு கூட்டுறவு சர்க்கரை ஆலைகள் மற்றும் தனியார் கூட்டுறவு சர்க்கரை ஆலைகளை திறப்பதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு விரைந்து எடுக்கவேண்டும் என்றும் கோரிக்கைகளை முன்வைத்தனர்.

இதன்பின் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்க பொதுச்செயலாளர் ரவீந்திரன், 2018ஆம் ஆண்டு மத்திய அரசால் கொண்டு வரப்பட்டுள்ள வரி வருவாய் பங்கீட்டு முறை சட்டத்தால் விவசாயிகளுக்கு கிடைக்கக்வேண்டிய கரும்புக்கான உரிமைத்தொகை கிடைக்கவில்லை என்றும், அதற்கு பதில் குறைவான அளவில் ஊக்கத் தொகை மட்டுமே கிடைப்பதாகவும் கூறினார்.

மேலும், ஒரு டன் கரும்புக்கு நான்காயிரம் ரூபாய் கொள்முதல் விலையாக வழங்கப்படும் என திமுக தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்ட நிலையில், தற்போது கரும்பு விவசாயிகளை அரசு கைவிட்டதாக நினைக்கிறோம் என்றும் கூறினார்.  இது சம்பந்தமாக விவசாயத்துறை அமைச்சரை நேரில் சந்திக்க உள்ளதாகவும், விரைவில் தமிழக அரசு கரும்பு விவசாயிகளுக்கான உரிமைகளைப் பெற்றுத்தரும் என நம்புவதாகவும் கூறினார்.