தமிழ்நாடு

திடீரென்று வயல்வெளிகளில் தென்பட்ட வெட்டுக்கிளிகள் - விழுப்புரம் விவசாயிகள் அச்சம்

திடீரென்று வயல்வெளிகளில் தென்பட்ட வெட்டுக்கிளிகள் - விழுப்புரம் விவசாயிகள் அச்சம்

PT


நெற்பயிர்களைப் பாதிக்கும் பச்சை நிற வெட்டுக்கிளிகள் காணப்பட்டதால் விவசாயிகள் அச்சமடைந்துள்ளனர்.

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி பொன்பத்தி கிராமத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கரில் நெற்பயிர்கள் விவசாயம் செய்யப்பட்டு வருகிறது. இந்தியாவில் பாலைவன வெட்டுக்கிளிகளின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், விவசாயிகள் பயிரிட்ட பயிர்களில் பச்சை நிற வெட்டுக்கிளிகள் காணப்பட்டது.

இதனைப் பார்த்த விவசாயிகள் உடனடியாக வேளாண் துறைக்குத் தகவல் அளித்துள்ளனர். இதனடிப்படையில் மாவட்ட வேளாண்மை அறிவியல் நிலையத்தில் உள்ள ஆராய்ச்சியாளர்கள் வயல் வெளிப் பகுதிகளை நேரில் ஆய்வு செய்தனர்.

இது தொடர்பாக வேளாண் அதிகாரியிடம் கேட்டபோது “ இது வட இந்தியாவில் காணப்படும் பாலைவன வெட்டுக்கிளிகள் அல்ல. இது சாதாரணமான வெட்டுக்கிளிகள். அதைக்கண்டு விவசாயிகள் அச்சப்படத் தேவையில்லை. சந்தேகம் இருப்பின் வேளாண் அறிவியல் ஆராய்ச்சி நிலையங்களைத் தொடர்பு கொண்டு தகவலைத் தெரிவிக்கலாம். அது குறித்து நடவடிக்கைகள் உடனடியாக எடுக்கப்படும்" என்றனர்.