தமிழ்நாடு

கச்சிராயன் ஏரி விவகாரம்: திமுகவினர் திடீர் சாலைமறியல்

webteam

சேலம் மாவட்டம் எடப்பாடி சட்டமன்றத்தொகுதிக்குட்பட்ட கச்சிராயன் ஏரியில் வண்டல் மண் எடுப்பதை கண்டித்து திமுகவினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். 

கச்சிராயன் ஏரியை 2 லட்சம் மதிப்பில் அந்த பகுதி மக்கள் உதவியுடன் திமுகவினர் தூர்வாரி கரையை பலப்படுத்தியுள்ளனர். அந்த பணியை பார்வையிடுவதற்காக திமுகவின் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் நாளை சேலம் செல்லவுள்ளார். இந்நிலையில், நேற்று முன் தினம் கச்சிராயன் ஏரியில் வண்டல் மண் எடுக்க அரசு அனுமதி வழங்கியது. வண்டல் மண் எடுப்பதாகக் கூறிக்கொண்டு, ஏற்கனவே பலப்படுத்தி சீரமைக்கப்பட்ட ஏரியின் கரையை உடைப்பதாக திமுகவினர் குற்‌றம்சாட்டி, நேற்று காவல்துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். ஏற்கனவே தூர்வாரப்பட்ட ஏரியில் வண்டல் மண் எடுப்பதை தடுக்கவில்லை என்றால், தொடர் போராட்டங்கள் நடத்தப்படும் என திமுகவினர் அறிவித்திருந்தனர். இன்றும் கச்சிராயன் ஏரியில் மண் எடுக்கப்பட்டதால், சேலம் மேற்கு மாவட்ட திமுக செயலாளர் எஸ்.ஆர் சிவலிங்கம் தலைமையில் 200க்கும் அதிகமானோர் கோவை நெடுஞ்சாலையில் மகுடஞ்சாவடி என்ற இடத்தில் மறியலில் ஈடுபட்டனர். அவர்களை காவல்துறையினர் கைது செய்து அப்புறப்படுத்தினர்.