தமிழ்நாடு

கடலூர்: ஊர்வலத்தில் திடீர் மோதல்... ஆம்புலன்ஸிலும் அடாவடியில் ஈடுபட்ட நபர்களால் பரபரப்பு

கடலூர்: ஊர்வலத்தில் திடீர் மோதல்... ஆம்புலன்ஸிலும் அடாவடியில் ஈடுபட்ட நபர்களால் பரபரப்பு

webteam

புவனகிரி அருகே மாசி மகத்தை முன்னிட்டு நடைபெற்ற சாமி ஊர்வலத்தில் இரு பிரிவினரிடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இதில் காயமடைந்தவர்களை ஏற்றிச் சென்ற 108 ஆம்புலன்ஸ் வாகனத்தையும் சிலர் தாக்கும் வீடியோ வெளியாகி பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே மாசி மகத்தை முன்னிட்டு சாத்தப்பாடி கிராமத்தில் இருந்து சாலக்கரை மாரியம்மன் சாமி, சிதம்பரம் அருகே உள்ள சாமியார்பேட்டை பகுதிக்கு தீர்த்தவாரி சென்றது. இந்நிலையில் தீர்த்தவாரி சென்ற சாமி, மாலை ஊர் திரும்பும்போது சாமி வந்த டிராக்டரில் பல்வேறு பாடல்கள் ஒலித்தன.

அதிக சத்தத்துடன் டிராக்டர் மேலமணக்குடி கிராமத்தின் வழியாக சாத்தப்பாடி நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது, டிராக்டரில் பாடல் சத்தம் அதிகமாக இருப்பதாக மேல மணக்குடி கிராமத்தைச் சேர்ந்த ஒரு பிரிவினர் டிராக்டரில் சென்ற மற்றொரு பிரிவினரை தடுத்து நிறுத்தியுள்ளனர். அப்போது இரண்டு தரப்பினருக்கும் இடையேயான பேச்சுவார்த்தை, வாக்குவாதமாக மாறியுள்ளது. இதற்கிடையே சாமி ஊர்வலமும் சென்றுக்கொண்டிருக்க, ஒரு தரப்பினர் மற்றொரு தரப்பினரை தேடிச் சென்று தாக்கியுள்ளனர்.

இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டதில், சாத்தப்பாடி கிராமத்தைச் சேர்ந்த பள்ளி கல்லூரிகளில் படித்து வரும் மூவர், இரண்டு இளைஞர்கள், ஒரு முதியவர் என ஆறு பேர் படுகாயமடைந்துள்ளனர். இதைத்தொடர்ந்து அங்கிருந்தவர்கள் ஆம்புலன்ஸூக்கு அழைக்கவே, ஆம்புலன்ஸ் சென்றுள்ளது. அப்படி காயமடைந்தவர்களை 108 ஆம்புலன்ஸ் ஏற்றிச் சென்ற நிலையில், வடக்கு திட்டை பகுதியில் ஆம்புலன்ஸை வழிமறித்து அதன் உள்ளே ஏறி மீண்டும் சிலர் கடுமையாக தாக்கியுள்ளனர். இது குறித்த வீடியோவும் தற்போது வெளியாகி உள்ளது.

இதையடுத்து காயமடைந்தவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர். மேலும் கீழமனக்குடி மற்றும் சாத்தப்பாடி கிராமங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதற்கிடையே இரண்டு தரப்பினரும், இவ்விவகாரத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறி மாறி மாறி சாலை மறியல் செய்ததால் கடுமையான போக்குவரத்து பாதிப்பும் ஏற்பட்டது. இச்சம்பவங்களால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.