மதுரை புத்தகத் திருவிழா pt web
தமிழ்நாடு

அருள்வந்து ஆடிய மாணவிகள்... விருந்தினராக ராமர்... தொடர் சர்ச்சையில் மதுரை புத்தகத் திருவிழா!

மதுரை புத்தகத் திருவிழாவில் பள்ளி மாணவிகள் சாமியாடிய சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், நாட்டுப்புற பாடலே ஒலிபரப்பப்பட்டதாக மாவட்ட நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.

PT WEB

செய்தியாளர் மணிகண்ட பிரபு

மாவட்ட நிர்வாகம் அளித்துள்ள விளக்கம்

தமுக்கம் மைதானத்தில் அரசு சார்பில் நேற்று புத்தக கண்காட்சி தொடங்கியது. இதையடுத்து அங்கு சென்ற பள்ளி மாணவ, மாணவிகள், பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளை பார்த்துக் கொண்டிருந்தனர். அப்போது பக்திப்பாடல்கள் ஒலிபரப்பட்ட நிலையில், திடீரென மேடைக்கு கீழே அமர்ந்திருந்த மாணவிகள் சாமியாட ஆரம்பித்தனர். நேரம் செல்ல செல்ல பலரும் நாற்காலிகளை தள்ளிவிட்டு சாமியாடினர்.

சில மாணவிகள் மயங்கி விழுந்த நிலையில், அவர்களுக்கு அருகிலிருந்த பொதுமக்கள் தண்ணீர் கொடுத்து அமரவைத்தனர். இதையடுத்து கலைநிகழ்ச்சி பாதியிலேயே ரத்து செய்யப்பட்டது. புத்தக திருவிழாவில், பக்திப்பாடல்கள் ஒலிபரப்பப்பட்டு அதில் பள்ளி மாணவிகள் சாமியாடிய சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை

நாட்டுப்புற கலைஞர்களால் பாடப்பட்ட கருப்பசாமி பாடலே ஒலிபரப்பப்பட்டதாக மாவட்ட நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது. பாடல்களுக்கு உணர்ச்சிவசப்பட்டு சில மாணவிகள் சாமி ஆடியதாகவும் சிலர் நடனமாடியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாடல் ஒலிபரப்பப்பட்டதில் எந்த விதிமீறலும் இல்லை என்றும், முறையாகவே நிகழ்ச்சி நடத்தப்பட்டதாகவும் மாவட்ட நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.

அடுக்கடுக்காக எழும் கேள்விகள்

இந்நிலையில், மேலும் பல சர்ச்சைகள் எழுந்துள்ளது. குறிப்பாக மாணவர்கள் இரவு 8.30 மணிக்கு மேலும் ஏன் காத்திருக்க வைக்கப்பட்டனர், அமைச்சருக்காக காத்திருக்க வைக்கப்பட்டனரா என்ற கேள்வி எல்லாம் எழுந்துள்ளது. மாவட்ட முதன்மை கல்வி அலுவலரும் இதுதொடர்பாக விசாரணை நடத்திக் கொண்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

பள்ளி மாணவிகளை யார் அழைத்து வந்தது, அவர்கள் ஏன் காத்திருக்க வைக்கப்பட்டார்கள், விழாக் குழுவினரிடமும், மாவட்ட நிர்வாகத்திடமும் முன்கூட்டியே கருப்பசாமி வேடமிட்டு பாடல்கள் பாடப்படும் தகவல் தெரிவிக்கப்பட்டதா போன்ற விபரங்கள் எல்லாம் தற்போது சேகரிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

விருந்தினர்கள் அழைப்பிலும் சர்ச்சை

இருப்பினும் இதில் சர்ச்சை இல்லை என்றும், நாட்டுப்புற கலைகளில் வேடமிட்டு, அரசு இசைக் கல்லூரியைச் சேர்ந்த கலைக் குழுவினர் இந்த பாடல்களைப் பாடியதாக விளக்கத்தைக் கொடுத்துள்ளனர்.

இந்த புத்தகக் கண்காட்சியில் நிகழ்ச்சி அழைப்பாளர்கள் தொடர்பான சர்ச்சையும் எழுந்துள்ளது. புத்தகத் திருவிழாவிற்கு பேச்சாளர்களும், சிறப்பு விருந்தினர்களும் அழைக்கப்பட்டிருந்தனர். குறிப்பாக முன்னாள் தலைமைச் செயலாளர் இறையன்பு, மதுரை எம்பி சு. வெங்கடேசன், பேச்சாளர்கள் ஞானசம்பந்தன், ஐ லியோனி உள்ளிட்டோர் அழைக்கப்பட்டிருந்தனர். அந்த வரிசையில் தனியார் தொலைகாட்சியைச் சார்ந்த நகைச்சுவை நடிகர் ராமரும் அழைக்கப்பட்டுள்ளார்.

இதுதொடர்பாக மாவட்ட அதிகாரிகள் கூறுகையில், “ராமர் மதுரையை பூர்வீகமாக கொண்டவர். நகைச்சுவை என்ற தனித்திறமையால் அவரை அழைத்திருக்கிறோம். அவருக்கு மட்டும் சிறப்பு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்து தரவில்லை. பேச்சாளர் பர்வீன் சுல்தானா பேசியதற்கு பின் சிறிது நேரத்திற்கு அவர் பேசுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது” என தெரிவித்திருந்தனர்.

மதுரை புத்தகத் திருவிழாவிற்கு ராமர் அழைப்பு

இருப்பினும் புத்தகத் திருவிழா புத்தக வாசிப்பாளர்களின், புத்தக பிரியர்களின் நிகழ்வாக இருக்கக்கூடிய நிலையில், புத்தகங்கள் தொடர்பான நபர்களை அழைத்து நிகச்சிகளை நடத்த வேண்டும் என்ற கருத்து எழுந்திருக்கிறது.