தமிழ்நாடு

"கோவில்களை விடுதலை செய்ய மிகப்பெரிய போராட்டம் நடைபெறும்" - சுப்பிரமணியன் சுவாமி

"கோவில்களை விடுதலை செய்ய மிகப்பெரிய போராட்டம் நடைபெறும்" - சுப்பிரமணியன் சுவாமி

webteam

மசூதி, தேவாலயங்கள் அரசாங்க கட்டுபாட்டில் இல்லாத நிலையில் 4 லட்சம் இந்து கோவில்கள் அரசு கையில் உள்ளன. கோவிலை விடுதலை செய்ய மிகப்பெரிய போராட்டங்கள் நாட்டில் நடைபெற உள்ளது என சுப்ரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.

சென்னை சேத்துபட்டில் உள்ள தனியார் மண்டபத்தில் விசுவ ஹிந்து பரிஷத் அமைப்பின் முன்னாள் அகில உலக செயல் தலைவர் எஸ். வேதாந்தம்
எழுதிய ”மனதோடு பேசுகிறேன்” புத்தக வெளியீட்டு விழா நடைபெற்றது. நிகழ்ச்சியில் கலந்துகொண்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுப்பிரமணியன் ஸ்வாமி புத்தகத்தை வெளியிட்டார்.

பின்னர் மேடையில் பேசிய அவர், ”இந்து ஒற்றுமை குறித்த பிரச்னை நாட்டில் உள்ளது. அனைத்திற்கும் ஆர்பாட்டம் செய்து நீதிமன்றம் சென்றுதான் வெற்றி பெறவேண்டிய சூழல் உள்ளது. 80% இந்துக்கள் உள்ள நாட்டில் ராம சேதுவை காப்பாற்ற நீதிமன்ற தேவைப்படுகிறது. கோவிலை விடுதலை செய்யவும், கோவிலுக்குள் செல்லவும் நீதிமன்றம் செல்ல வேண்டிய சூழல் உள்ளது.

மசூதி, தேவாலயங்கள் அரசாங்க கட்டுபாட்டில் இல்லாத நிலையில் 4 லட்சம் இந்து கோவில்கள் அரசு கையில் உள்ளன. கோவிலை விடுதலை செய்ய மிகப்பெரிய போராட்டங்கள் நாட்டில் நடைபெற உள்ளது. இதுகுறித்து வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது. வெற்றி பெற்றால் அனைத்து கோவில்களும் அரசாங்கத்தின் பிடியிலிருந்து வெளிவரும்.

இந்து என்றால் வட நாடு தென்நாடு என பார்க்க மாட்டார்கள். மூன்று கடல் எங்கு சங்கமிக்கிறதோ அதுதான் திராவிடம். கர்நாடகா, ஆந்திரா, கேரளா, தமிழ்நாடு அனைத்தும் சேர்ந்தது தான் திராவிடம். அது ஒரு சாதியோ மதமோ இல்லை. ஆனால் மக்களை முட்டாளாக்கி பொய் சொல்லி திராவிடம் என்றால் வித்தியாசமான ஒரு சமுதாயம் என கூறுகின்றனர். எனவே இதை எதிர்கொள்ள இந்துக்கள் ஒன்றாக வேண்டும். நாட்டில் இந்து மறுமலர்ச்சி அடைய நிறைய பணிகள் செய்யவேண்டிய சூழல் உள்ளது.