திமுகவில் இருந்து விலகியதை அறிவித்துள்ளார் சுப்புலட்சுமி ஜெகதீசன்.
திமுக துணைப் பொதுச் செயலாளர் சுப்புலட்சுமி ஜெகதீசன் திமுகவில் இருந்து விலகுவதாக கடந்த சில நாட்களாக தகவல் பரவிய நிலையில் சுப்புலட்சுமி ஜெகதீசன் திமுகவில் இருந்து தான் விலகியதை அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறார்.
இதுதொடர்பாக சுப்புலட்சுமி ஜெகதீசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், `2009-ல் எனது நாடாளுமன்ற உறுப்பினர் பணிக்காலம் நிறைவு பெற்றதற்கு பிறகு மீண்டும் தேர்தலில் போட்டியிடாமல் கட்சிப் பணிகளை மட்டும் மேற்கொள்வது என்ற எனது முடிவை தலைவர் கலைஞர் அவர்களிடம் தெரிவித்துவிட்டேன். கலைஞர் மறைவுக்குப் பின் அவர்களின் விருப்பத்தின்படி மு.க.ஸ்டாலின் அவர்களை முதலமைச்சர் ஆக்கும் நோக்கத்துடன் கழக பணிகளை மட்டும் செய்து வந்தேன்.
2021 சட்டமன்ற பொது தேர்தலில் கழகம் மகத்தான வெற்றி பெற்று மு.க.ஸ்டாலின் முதலமைச்சராக பொறுப்பேற்று அரசு பணிகளையும் கட்சி பணிகளையும் நாடே பாராட்டும் வகையில் சிறப்பாக செயல்படுத்திக் கொண்டிருக்கிறார். இது எனக்கு மிகுந்த மன நிறைவை தருகிறது. இந்த நிறைவோடு அரசியலில் இருந்து ஓய்வு பெற வேண்டும் என்ற எனது நீண்ட நாள் விருப்பத்தின் அடிப்படையில் ஆகஸ்ட் மாதம் 29ஆம் தேதி அன்று பதவியில் இருந்தும் கட்சியிலிருந்தும் விலகுவதாக எனது விலகல் கடிதத்தை தலைவர் தளபதி அவர்களுக்கு அனுப்பி விட்டேன்’ என தெரிவித்துள்ளார்.
இதன் மூலம் திமுக துணை பொது செயலாளர் எண்ணிக்கை 5 என்பதிலிருந்து தற்போது நான்காக குறைந்துள்ளது. அடுத்த மாதம் நடைபெற உள்ள திமுக பொதுக்குழுவில், வேறு ஒரு மகளிர் துணை பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட வாய்ப்பு உள்ளது. சுப்புலட்சுமி ஜெகதீசனின் தற்போதைய வயது 75.
மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆர் மூலம் 1977 ம் ஆண்டு அரசியலுக்கு அடையாளம் காட்டப்பட்டவர் சுப்புலட்சுமி ஜெகதீசன், கொடுமுடியில் பள்ளி ஆசிரியராக பணியாற்றிய இவர் எம்.ஜி.ஆர் மூலம் அரசியலில் அறிமுகம் செய்யப்பட்டு 1977 ம் ஆண்டு ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். எம்.ஜி.ஆர் அமைச்சரவையில் 1978 முதல் 1980 வரை கைத்தறித்துறை அமைச்சராக இருந்தார்.பின்னர் அதிமுகவில் இருந்து விலகி 1980 இல் திமுகவில் இணைந்து, 1984 இல் திமுக சார்பில் ஈரோடு தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.
1989 தேர்தலில் ஈரோடு தொகுதியில் போட்டியிட்டு வெற்றுபெற்று கருணாநிதி அமைச்சரவையில் 1991 வரை சமூக நலத்துறை அமைச்சராக இருந்தார். 1991 ம் ஆண்டு வெள்ளக்கோவில் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். 1993 பழனி மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். 1996 இல் மொடக்குறிச்சி தொகுதியில் 1,030 வேட்பாளர்களுடன் போட்டியிட்டு வெற்றிபெற்றார். 2001 இல் மொடக்குறிச்சி தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.
2004 மக்களவைத் தேர்தலில் திருச்செங்கோடு மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்று மன்மோகன்சிங் அமைச்சரவையில் சமூகநீதி மற்றும் அதிகாரமளிப்பு துறை இணை அமைச்சராக இருந்தார். இந்த தேர்தலில் சுப்புலட்சுமி ஜெகதீசனை எதிர்த்து போட்டியிட்டு தோல்வியடைந்தவர் எடப்பாடி பழனிசாமி. 2011, 2016 சட்டப்பேரவை தேர்தல்களில் போட்டியிடவில்லை.2019 மக்களவைத் தேர்தலின்போது, வயது மூப்பு காரணமாக இனி தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என சுப்புலட்சுமி ஜெகதீசன் அறிவித்திருந்தார். ஆனால் 2021 தேர்தலில் டக்குறிச்சி தொகுதியில் மீண்டும் போட்டியிட்டார்.
2021 சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்றால் சபாநாயகர் ஆகும் வாய்ப்பு சுப்புலட்சுமி ஜெகதீசனுக்கு பிரகாசமாக இருக்கிறது என்றெல்லாம் பேச்சுகள் அதிகம் வந்த நிலையில் மொடக்குறிச்சி தொகுதியில் சொற்ப வாக்குகள் வித்தியாசத்தில் பாஜக வேட்பாளரிடம் சுப்புலட்சுமி ஜெகதீசன் தோல்வியை சந்தித்தார்.
திமுகவில் துணை பொதுச்செயலாளர் பதவி முக்கியமான பதவியாக இருக்கும் நிலையில் சட்டமன்றத் தேர்தல் தோல்விக்கு பிறகு கட்சி பணிகளில் அதிகம் தீவிரம் காட்டாமல் இருந்து வந்த சுப்புலட்சுமி ஜெகதீசன் கட்சியின் முக்கிய விழாக்களில் பங்கேற்பதையும் தவிர்த்து வந்தார். சமீபத்தில் நடைபெற்ற திமுகவின் முப்பெரும் விழாவிலும் சுப்புலட்சுமி ஜெகதீசன் பங்கேற்கவில்லை. அதே சமயம் சுப்புலட்சுமி கணவர் ஜெகதீசன் தனது முகநூல் பக்கத்தில், மின் கட்டணம் உயர்வு குறித்தும் வைகோ ஆவணப்பட வெளியிட்டில் முதல்வர் பங்கேற்றது குறித்தும் எதிர்மறையாக கருத்து தெரிவித்து வெளியிட்ட பதிவு திமுக தரப்பினர் இடையே சலசலப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் நிலையில் துணை பொதுச்செயலாளர் பதவியை சுப்புலட்சுமி ஜெகதீசன் ராஜினாமா செய்வதாக கடந்த இரண்டு தினங்களாக தகவல் பரவிய நிலையில் இப்போது சுப்புலட்சுமி ஜெகதீசன் அதனை உறுதி செய்து இருக்கிறார்.
- எம்.ரமேஷ்