தமிழ்நாடு

“ஆவணம் இருந்தாலும் பணம் கேட்டு ஆபாசமாக திட்றாங்க”- மனமுடைந்த டிரைவர் தற்கொலை முயற்சி..!

“ஆவணம் இருந்தாலும் பணம் கேட்டு ஆபாசமாக திட்றாங்க”- மனமுடைந்த டிரைவர் தற்கொலை முயற்சி..!

webteam

திருப்பூரில் ஆட்டோ டிரைவரை ஆபாச வார்த்தையால் திட்டி தற்கொலைக்கு தூண்டியதாக எழுந்த புகாரில், காவல்நிலைய உதவி ஆய்வாளர் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

திருப்பூர், கூலிபாளையம் நால்ரோடு பகுதியை சேர்ந்தவர் ஆட்டோ டிரைவர் அர்ஜுன் ராஜ். இவர் அதே பகுதியில் வாடகைக்கு சரக்கு ஆட்டோ ஓட்டி வருகிறார். வழக்கம்போல் கூலிபாளையம் பகுதியிலிருந்து புதிய பஸ் நிலையம் பகுதிக்கு கட்டிட பொருட்களை தனது ஆட்டோவில் ஏற்றிக் கொண்டு வாடகைக்கு சென்றுள்ளார். 

அப்போது கூலிபாளையம் நால்ரோட்டிலுள்ள சோதனை சாவடியில், ஊத்துக்குளி காவல்நிலைய உதவி ஆய்வாளர் ராஜமூர்த்தி, அர்ஜுன் ராஜுவின் ஆட்டோவை சோதனையிட்டு, இருநூறு ரூபாய் பணம் கேட்டதாக கூறப்படுகிறது. ஆவணங்கள் அனைத்தும் சரியாக உள்ளதாகவும், எதற்கு பணம் தர வேண்டும் எனவும் கேட்ட அர்ஜுன்ராஜை உதவி ஆய்வாளர் ராஜமூர்த்தி ஆபாச வார்த்தைகளால் திட்டியதாகவும் கூறப்படுகிறது.

இதனால் மனமுடைந்த அர்ஜுன், ஆட்டோவில் வைத்திருந்த டீசலை தன் உடல் மீது ஊற்றி தீக்குளிக்க முயன்றுள்ளார். இதனைக் கண்ட அங்கிருந்த பொதுமக்கள் அர்ஜுன்ராஜை காப்பாற்றி, உதவி ஆய்வாளரின் போக்கை கண்டித்து சாலைமறிலில் ஈடுபட்டனர். 

உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஊத்துக்குளி காவல்துறையினர் மற்றும் திருப்பூர் தெற்கு தொகுதி எம்எல்ஏ குணசேகரன் ஆகியோர் பொதுமக்களிடம் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததின் பேரில் பொதுமக்கள் அனைவரும் கலைந்து சென்றனர். 

முதற்கட்ட விசாரணையை அடுத்து, இந்த விவகராத்தில் ஊத்துக்குளி காவல்நிலைய உதவி ஆய்வாளர் ராஜமூர்த்தியை ஆயுதப்படைக்கு மாற்றம் செய்து திருப்பூர் மாவட்ட எஸ்.பி. திஷா மிட்டல் உத்தரவிட்டுள்ளார். துறை ரீதியான விசாரணை தொடரும் என்றும் எஸ்.பி திஷா மிட்டல் கூறியுள்ளார்.