தமிழ்நாடு

2வது அலை தீவிரமான நிலையில் முன்களப் போராளிகளை இப்படியா நடத்துவது? - சு.வெங்கடேசன் எம்.பி

2வது அலை தீவிரமான நிலையில் முன்களப் போராளிகளை இப்படியா நடத்துவது? - சு.வெங்கடேசன் எம்.பி

Sinekadhara

கொரோனா முன்கள பணியாளர்களுக்கு வழங்கிவந்த காப்பீடு திட்டம் உடனே புதுப்பிக்கப்பட வேண்டும் என சு. வெங்கடேசன் எம்.பி கோரிக்கை வைத்துள்ளார். 

நமது நாட்டில் கொரோனா இரண்டாம் அலை வேகமாக பரவிக்கொண்டிருக்கும் இந்தச் சூழ்நிலையில், கொரோனா முன்களப் பணியாளர்களுக்கு வழங்கி வந்த ரூ.50 லட்சம் காப்பீட்டுத் திட்டம் காலாவதியாகி 27 நாட்கள் ஆகிவிட்டது. கொரோனா தொற்றின் வேகம் அதிகமாகி வருகிற இந்த வேளையில், மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட முன்கள பணியாளர்களின் காப்பீடு திட்டம் விரைவில் புதுப்பிக்கப்படவேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கைகளை முன்வைத்து வருகின்றனர்.

இதுகுறித்து சு.வெங்கடேசன் எம்.பி தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில், '’இரண்டாவது அலை தீவிரமான நிலையில் முன்களப் போராளிகளை இப்படியா நடத்துவது? அவர்களுக்கான காப்பீட்டுத் திட்டம் எவ்வித கால தாமதமுமின்றி உடனடியாக புதுப்பிக்கப்பட வேண்டும். கோவிட் முன் வரிசை வீரர்களே! உங்கள் நலன் காக்க தேசம் குரல் கொடுக்கும்! தேசம் காக்க உங்கள் பணி தொடருங்கள்!’’ என்று குறிப்பிட்டு விரிவான அறிக்கை ஒன்றையும் இணைத்துள்ளார்.

அதில், காப்பீட்டுத் திட்டம் எவ்வித கால தாமதமுமின்றி உடனடியாக புதுபிக்கப்படவேண்டும் எனவும், காப்பீடு காலாவதியான நள்ளிரவுக்கு பின்னர் உயிரிழந்தோருக்கும் காப்பீடு பயன் கிடைப்பதை உறுதி செய்யவேண்டும் எனவும், இந்த பயன் உரித்தானவர் ஒவ்வொருவருக்கும் கிடைப்பதை உறுதி செய்யும் வகையில் தெளிவான வழிகாட்டல்கள் இன்சூரன்ஸ் நிறுவனத்துக்கும், அனைத்து மாநில/ யூனியன் பிரதேசங்களுக்கும் வழங்கப்படவேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.