தமிழ்நாடு

மாணவி ஜீவிதாவின் மருத்துவக் கல்லூரி கட்டணத்தை ஏற்ற தமிழிசை

மாணவி ஜீவிதாவின் மருத்துவக் கல்லூரி கட்டணத்தை ஏற்ற தமிழிசை

webteam

அரசுப் பள்ளி மாணவி ஜீவிதா 2 ஆண்டு போராட்டத்திற்கு பிறகு நீட் தேர்வில் 605 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்திருக்கிறார்.  அவரின் மருத்துவக் கல்லூரி கட்டண செலவை தான் ஏற்பதாக பாஜக தமிழக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
 
சென்னையை அடுத்த அனகாபுதூர் அரசுப் பள்ளியில் பயின்ற ஜீவிதா 2017ஆம் ஆண்டில் 12ஆம் வகுப்பை முடித்தார். 10ஆம் வகுப்பில் 497 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் 3ஆம் இடம் பெற்ற ஜீவிதா, +2வில் 195 மருத்துவக் கட் ஆஃப் பெற்றிருந்தார். 

ஆனால், அந்தாண்டு முதல் நீட் தேர்வு தமிழகத்தில் அமலுக்கு வந்த நிலையில், என்ன ஆனாலும் தனது ஒரே குறிக்கோளான மருத்துவக் கனவை நனவாக்க நினைத்த ஜீவிதாவிற்கு முழு ஆதரவை அளித்துள்ளது அவரின் ஏழைக் குடும்பம். கடன் வாங்கி தனியார் நீட் பயிற்சி மையத்தில் படிக்க வைத்துள்ளனர் ஜீவிதாவின் பெற்றோர். 2018ஆம் ஆண்டு நீட் தேர்வில் 361 மதிப்பெண்கள் பெற்று 4 மதிப்பெண்களில் மருத்துவ இடம் கிடைக்காமல் போனாலும், தனது விடா முயற்சியால் இந்தாண்டில் 605 மதிப்பெண் பெற்றிருப்பதாக ஜீவிதாவின் தாய் தெரிவித்துள்ளார்.

கார்மெண்டில் தையல் தொழிலாளியாக 20 ஆண்டுகளாக பணியாற்றும் காது கேளாத பன்னீர்செல்வம் என்பவரின் மூன்று மகள்களில் இரண்டாவது மகள்தான் ஜீவிதா. 605 மதிப்பெண்கள் எடுத்துள்ளதால் விரும்பும் அரசு மருத்துவக் கல்லூரியில் ஜீவிதாவுக்கு இடம் கிடைப்பது உறுதியாகி உள்ளது. 

ஆனால், குடும்பச் சூழ்நிலையில் அரசு மருத்துவக் கல்லூரியின் கட்டணத்தை செலுத்துவதே கடினம் என்று மாணவியின் குடும்பத்தினர் கவலை தெரிவித்த நிலையில் மாணவியின் மருத்துவக் கல்லூரி கட்டண செலவை ஏற்பதாக தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ள தமிழிசை, ''சென்னை அனகாபுத்தூர் மாணவி ஜீவிதாவின் விடாமுயற்சியை பாராட்டி அவருடைய மருத்துவக் கல்லூரி கட்டண செலவை ஏற்றுக்கொள்கிறேன். ஏழை தையல் தொழிலாளர் மகளின் மருத்துவக் கனவு நனவாகட்டும். மாணவிக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள்’’ என்று தெரிவித்துள்ளார்