செய்தியாளர்: நைனா முகம்மது.
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே எஸ்.எஸ்.கோட்டையில் உள்ள சிங்கம்புணரி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் 80-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். இன்று பள்ளியில் மாணவ மாணவிகள் மதிய உணவு சாப்பிட்டபோது, திடீரென 9 மாணவ, மாணவிகளுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர்களை திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர்.
கடந்த ஒரு வார காலமாக சாப்பாட்டில் புழு, கல், முடி உள்ளிட்டவைகள் இருந்ததாகவும், மாணவர்கள் அதுகுறித்து பெற்றோர்களிடம் புகார் அளித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனையடுத்து பெற்றோர்கள் பள்ளிக்குச் சென்று பள்ளி தலைமையாசிரியர் மற்றும் சத்துணவு அமைப்பாளரிடம் புகார் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் இன்று மதிய உணவு சாப்பிட்ட குழந்தைகள் உணவிலும் கல், முடி இருந்ததாகக் கூறப்படுகிறது. இதனையடுத்து மதிய உணவு சாப்பிட்ட குழந்தைகள் திடீரென வாந்தி எடுத்த நிலையில் திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்து சேர்த்தனர்.
புகார்கள் எழுப்பப்பட்ட நிலையில், எந்த நடவடிக்கையும் எடுக்காத பள்ளி தலைமையாசிரியர் மற்றும் சத்துணவு அமைப்பாளர்கள் மீது பள்ளி கல்வித்துறை நடவடிக்கை எடுக்க பெற்றோர்கள் மற்றும் கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதைத்தொடர்ந்து எஸ்.எஸ்.கோட்டை காவல் நிலைய சார்பு ஆய்வாளர்கள் சேகரன், வேல்முருகன் ஆகியோர் அரசு மருத்துவமனைக்கு நேரில் சென்று மாணவர்களிடம் விசாரணையை மேற்கொண்டனர்.