தமிழ்நாடு

பொள்ளாச்சியில் திரண்ட ஆயிரக்கணக்கான மாணவ-மாணவிகள்.. நியாயம் கேட்டு முழக்கம்..!

பொள்ளாச்சியில் திரண்ட ஆயிரக்கணக்கான மாணவ-மாணவிகள்.. நியாயம் கேட்டு முழக்கம்..!

Rasus

பொள்ளாச்சி பாலியல் கொடூரத்தை கண்டித்து, பொள்ளாச்சி சுற்றுவட்டார கல்லூரிகளில் இருந்து ஒன்றுதிரண்ட ஆயிரக்கணக்கான மாணவ- மாணவியர்கள் நகராட்சி அலுவலகம் எதிரில் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இளம்பெண்களை பாலியல் வன்கொடுமை செய்து, அதனை வீடியோவாக பதிவு செய்து மிரட்டி வந்த 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதுதொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகி அனைவரையும் பதற வைத்தது. இந்த சம்பவத்தில் தொடர்புடைய அனைவரும் தண்டிக்கப்பட வேண்டும் என்று சமூக வலைதளங்களில் பலரும் குரல் எழுப்பி வருகின்றனர்.

இதனிடையே இவ்விவகாரத்தில் குற்றவாளிகள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என நேற்று முதலே மாணவர்கள் போராட்டத்தில் இறங்கியுள்ளனர். நேற்று திருச்சி மற்றும் கோவை சட்டக்கல்லூரி மாணவர்கள் போராட்டம் நடத்திய நிலையில், இன்று தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் மாணவர்களின் போராட்டம் இரண்டாவது நாளாக தொடர்ந்து வருகிறது.

பொள்ளாச்சி சம்பவத்தை கண்டித்து உடுமலையில் கல்லூரி மாணவர்கள் வகுப்பை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதேபோல திருவண்ணாமலை அரசு கலைக்கல்லூரி மாணவ, மாணவிகளும் போராட்டத்தில் இறங்கியுள்ளனர். கிட்டத்தட்ட 1000 பேர் கல்லூரி வாயிலின் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். குற்றவாளிகளை அனைவரையும் கைது செய்ய வேண்டும் என அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

இதேபோல சம்பவம் நடைபெற்ற பொள்ளாச்சியிலும் மாணவர்களின் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. பொள்ளாச்சி சுற்றுவட்டார கல்லூரிகளில் இருந்து ஒன்றுதிரண்ட ஆயிரக்கணக்கான மாணவர்கள் நகராட்சி அலுவலகம் எதிரில் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். இப்போராட்டத்தில் ஏராளமான மாணவ- மாணவிகள் பங்கேற்றுள்ளனர். ‘பெண்களை வாழவிடு’, “பெண்களுக்கு பாதுகாப்பு கொடு”, குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை வேண்டும் என்பன உள்ளிட்ட முழக்கங்களுடன் அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.