தமிழ்நாடு

50 மாணவிகள், 2 மணி நேரம்.. அன்னை தெரசாவின் பிரம்மாண்ட ஓவியத்தை வரைந்து அசத்தல்!

50 மாணவிகள், 2 மணி நேரம்.. அன்னை தெரசாவின் பிரம்மாண்ட ஓவியத்தை வரைந்து அசத்தல்!

webteam

அன்னை தெரசாவின் நினைவு தினத்தை முன்னிட்டு, அன்னை தெரசா ஓவியத்தை 25 அடி உயர திரைத்துணியில் 50 மாணவிகள் சேர்ந்து 2 மணி நேரத்தில் வரைந்து அசத்தியுள்ளனர். 

அன்னை தெரசாவின் 25 ம் வருட நினைவு தினத்தை முன்னிட்டு, அவரது தன்னலமற்ற சேவையை அடுத்த தலைமுறையினருக்கு கொண்டு செல்லும் முயற்சியாக அன்னை தெரசா அறக்கட்டளை மற்றும் சிவராம் கலைக்கூட ஓவியப் பயிற்சி மாணவிகள் 50 பேர் இணைந்து 25 அடி உயர திரைத்துணியில் இரண்டு மணி நேரத்தில் அன்னை தெரசா ஓவியத்தை வரைந்து அசத்தி உள்ளனர்.

வாழும் வாழ்க்கை முழுவதும் தன்னலமற்ற பொது சேவைகளை செய்து கருணையின் அடையாளமாகவே வாழ்ந்தவர், அன்னை தெரசா. மக்கள் சேவையில் குறிப்பாக இயலாதோர் வாழ்வில் உள்ள இன்னல்களை நீக்க தன்னால் முடிந்த அளவு போராடி தன் வாழ்வு முடியும் வரை, அவர் செய்த சேவைகளால் மட்டுமே வெளி உலகிற்கு அடையாளமானவர்.

மேலும் அன்னை தெரசா அவர்களின் வாழ்க்கை குறித்தும், அவரது பொது சேவை குறித்தும் அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்லும் வகையில், நெல்லையைச் சேர்ந்த அன்னை தெரசா அறக்கட்டளை தொண்டு நிறுவனம் மற்றும் சிவராம் கலைக்கூடம் இரண்டும் இணைந்து நினைவு விழாவை கொண்டாடினர். அந்த விழாவில், அன்னை தெரசா அவர்களின் 25 வது வருட நினைவு தினத்தை மாணவ மாணவிகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கொண்டு செல்ல ஓவிய பயிற்சி மாணவிகள் மூலம் ஒரு முன்னெடுப்பை தொடங்கினர்.

அதன்படி இன்று பாளையங்கோட்டையில் உள்ள வ.உ.சி விளையாட்டு மைதானத்தில் 25 அடி நீள வெள்ளை திரைத்துணியை தரையில் விரித்து, அதில் அன்னை தெரசாவின் ஓவியத்தை வரைய தொடங்கினர்.

சிவராம் கலைக்கூட ஓவியப் பயிற்சி பள்ளி மாணவ மாணவிகள் 50 பேர் இந்த ஓவியத்தை தூரிகைகள் கொண்டு இரண்டு மணி நேரத்தில் வரைந்து முடித்தனர். மேலும் துணியில் வரையப்பட்ட அன்னை தெரசா ஓவியத்தை சுற்றிலும் அன்னை தெரசா உருவப்படங்களை ஒட்டி மேலும் ஓவியத்திற்கு அழகு சேர்த்தனர்.

நிகழ்ச்சி முடிவில் அன்னை தெரசா அறக்கட்டளை சார்பில் மாணவிகள் 50 பேருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. மேலும் இந்த அன்னை தெரசா ஓவியம் வரையப்பட்ட திரைத்துணியை லேமினேசன் செய்து நிலை மாநகரில் உள்ள கல்லூரிகளில் மாணவ மாணவிகள் பார்வைக்கு வைக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

பின்னர் பேசிய அன்னை தெரசா அறக்கட்டளையின் நிறுவனர் மகேஷ், அன்னை தெரசாவின் பொது சேவை குறித்த வரலாற்று தகவல்கள் அடுத்த தலைமுறையினருக்கு சென்றடைய வேண்டும் என தெரிவித்தார்.

- நெல்லை நாகராஜ்