தமிழ்நாடு

சூரப்பாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர் சங்கத்தினர் போராட்டம்

Rasus

அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தராக கர்நாடகாவைச் சேர்ந்தவரை நியமித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்திய மாணவர் சங்கத்தினர் சார்பில் ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது.

அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தராக பெங்களூருவைச் சேர்ந்த ஐஐஎஸ்சி முன்னாள் பேராசிரியர் சூரப்பாவை தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் கடந்த 5-ம் தேதி நியமனம் செய்து உத்தரவிட்டார்.  இதனிடையே அண்ணா பல்லைக்கழக துணைவேந்தராக வேறு மாநிலத்தைச் சேர்ந்த ஒருவர் நியமனம் செய்யப்பட்டதற்கு தமிழக எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. கல்வியாளர்கள் மத்தியிலும் அதிருப்தி நிலவியது. அரசு தரப்பிலோ, துணைவேந்தர் நியமனம் என்பது ஆளுநர் சம்பந்தப்பட்டது. அதில் அரசு தலையிட முடியாது என தெரிவித்துவிட்டது. இதனிடையே அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தராக சூரப்பா நியமிக்கப்பட்டது தொடர்பாக ஆளுநர் மாளிகை விளக்கம் அளித்தது. அதில் துணைவேந்தர் நியமனம் நேர்மையாகவும், வெளிப்படைத் தன்மையாகவும் நடைபெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. மேலும் நியமனத்தில் தலையீடு ஏதும் இல்லை எனவும் கூறப்பட்டது.

இந்நிலையில்  அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தராக கர்நாடகாவைச் சேர்ந்தவரை நியமித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்திய மாணவர் சங்கத்தினர் சார்பில் ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. நூற்றுக்கணக்கான மாணவர்கள் இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்கள் கூறும்போது, “ தமிழகத்தில் திறன்வாய்ந்த கல்வியாளர்கள் பலர் உள்ளனர். ஆனால் அவர்களை நியமிக்காமல் மத்திய பாஜக அரசின்படி செயல்படும் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் கர்நாடகாவைச் சேர்ந்த ஒருவரை துணைவேந்தராக நியமித்துள்ளார். இதில் ஆர்எஸ்எஸ் பின்புலம் உள்ளது” என தெரிவித்தார்.