ஒசூரில் தனியார் பள்ளியில் கல்வி கட்டணம் கட்டாத 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் வகுப்பறையில் சிறை வைக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஓசூர் சிப்காட் பகுதியில் தனியார் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். தற்போது இந்த பள்ளியில் இறுதியாண்டு தேர்வு நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இன்று காலை பள்ளியில் படித்து வரும் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் தேர்வுக்கான கல்வி கட்டணத்தை செலுத்தவில்லை எனக் கூறி பள்ளியின் வகுப்பறையில் சிறைவைக்கப்பட்டனர். மேலும் ஏராளமான மாணவ மாணவிகள் பள்ளியிலிருந்து வெளியேற்றவும் செய்யப்பட்டனர்.
இதுகுறித்து அறிந்த மாணவ மாணவிகளின் பெற்றோர்கள் அந்த தனியார் பள்ளிக்கு சென்று பள்ளி நிர்வாகத்திடமும் ஆசிரியர்களிடமும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. ஒரு சில பெற்றோர்கள் உடனடியாக கல்வி கட்டணத்தை கட்டி தங்களது பிள்ளைகளை தேர்வுக்கு அனுப்பினர். கல்விக் கட்டணத்தை கட்ட முடியாத ஏராளமான பெற்றோர்கள், பள்ளிக்கு முன்பாக வந்து தங்களது நியாயத்தை வெளிப்படுத்தும் விதமாக பள்ளிக்கு எதிராக போராட்டம் நடத்தினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இது சம்பந்தமாக கல்வித்துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கல்வி கட்டணம் கட்டாததால் மாணவர்கள் பள்ளியில் சிறை வைக்கப்பட்டதும் வெளியேற்றப்பட்டதும் பெற்றோர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. பெற்றோர்கள் கல்வி கட்டணத்தை கட்டவில்லை என்றால் பள்ளி நிர்வாகம் அதற்கு கால அவகாசம் கொடுக்க வேண்டும். அதனை விட்டுவிட்டு மாணவர்களை பழி வாங்கினால் அவர்களுடைய மனம் பாதிக்கப்பட்டு படிப்பில் கவனம் செலுத்த முடியாத நிலை உருவாகும். எனவே இதனை பள்ளி நிர்வாகம் தவிர்க்க வேண்டும் என பெற்றோர்கள் ஆதங்கத்துடன் தெரிவித்தனர்.