தமிழக அரசின் மருத்துவக் கல்லூரிகளில் இந்த ஆண்டு மருத்துவம் படிக்க சேர்ந்துள்ள மாணவர்களில் 4 பேர் மட்டும் அரசுப் பள்ளிகளில் படித்தவர்கள் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
வெளிமாநிலத்தைச் சேர்ந்த 191 மாணவர்கள் மாநில அரசின் இடஒதுக்கீட்டில் அரசின் 22 மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்துள்ளனர் என்பது உள்ளிட்ட தகவல்கள் மருத்துவக் கல்வி இயக்குநரகம் கீழ் ஆர்.டி.ஐ மூலம் வெளியாகியுள்ள புள்ளி விவரங்களில் இடம்பெற்றுள்ளன.
நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்ட பின்னர், கடந்த ஆண்டு வெளிமாநிலத்தைச் சேர்ந்த 422 மாணவர்கள் தமிழக அரசின் மருத்துவ கல்லூரிகளில் சேர்ந்து பயின்றனர். இது மிகப்பெரிய சர்ச்சையை உருவாக்கியது. வருவாய் துறையிடம் இருந்து இருப்பிட சான்றிதழ் பெற்ற பிறகு தமிழக மாணவர்களுடன் அவர்கள் போட்டியிடுகின்றனர்.
மாநில அரசின் இடஒதுக்கீட்டில் வெளிமாநில மாணவர்கள் சேர்வது குறித்த சர்ச்சை கிளம்பியது, புதிய விதிமுறைகள் கொண்டுவரப்பட்டன. அதன்படி, மருத்துவ கல்லூரியில் சேரும் மாணவர்களின் பெற்றோர்கள் அவர்களது பள்ளிப் படிப்பை தமிழகத்தில் முடித்திருக்க வேண்டும். இந்தப் புதிய விதிமுறையால், வெளிமாநில மாணவர்களின் சேர்க்கை குறைந்துள்ளது. கடந்த ஆண்டு 400க்கு மேல் இருந்த எண்ணிக்கை தற்போது 200க்கும் கீழ் குறைந்துள்ளது.
இருப்பிட சான்றிதழ் மூலம் வெளிமாநில மாணவர்கள் தமிழக அரசின் மருத்துவக் கல்லூரிகளில் மாநில அரசின் இடஒதுக்கீட்டில் சேருவதை தடுக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று போடப்பட்டது. சட்டத்திற்கு புறம்பாக வெளிமாநில மாணவர்கள் இருப்பிடச் சான்றிதழ் பெற்று மருத்துவக் கல்லூரிகளில் சேருவதாக அந்த மனுவில் குற்றம்சாட்டியிருந்தது. இந்த வழக்கு ஒரு வருடத்திற்கு மேலான நிலுவையில் உள்ளது.
இது ஒருபுறம் இருக்க, 2017 ஆம் ஆண்டு வரை தமிழக மாணவர்களுடன், வெளிமாநில மாணவர்களால் போட்டியிட முடியாத நிலை இருந்தது. தமிழக மாணவர்கள் சிறப்பான மதிப்பெண்களை பெறுவார்கள். ஆனால், நீட் கட்டாயமாக்கப்பட்ட பிறகு நுழைவுத் தேர்வில் தமிழக மாணவர்களைவிட அவர்கள் அதிக மதிப்பெண்கள் பெறுகிறார்கள்.
இதனிடையே, அரசு பள்ளிகள் மற்றும் மாநில அரசின் பாடத்திட்டத்தின் கீழ் படிக்கும் மாணவர்களுக்கு தனியான இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று அரசுப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் வலியுறுத்துகின்றனர்.
2016 ஆம் ஆண்டு நீட் தேர்வு இல்லாமல் 12 ஆம் வகுப்பில் எடுத்த மதிப்பெண்கள் அடிப்படையில் எம்பிபிஎஸ் மாணவர் சேர்க்கை நடந்த போது, அரசுப் பள்ளியில் பயின்ற 30 மாணவர்களுக்கு எம்பிபிஎஸ் படிக்க வாய்ப்பு கிடைத்தது. ஆனால், இரண்டு ஆண்டுகளில் அந்த எண்ணிக்கை வெறும் 4 ஆக குறைந்துள்ளது.
தமிழக அரசின் கீழ் இயங்கும் 22 அரசு மருத்துவக் கல்லூரிகளில் மொத்தம் 2,447 இடங்கள் உள்ளன. மொத்த இடங்களில், இந்த ஆண்டு அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் மாநில அரசின் பாடத்திட்டத்தில் படித்த மாணவர்கள் வெறும் 40 பேர் மட்டுமே. 2447 இடங்களில் சேர்ந்துள்ள மாணவர்களில் பாதிக்கும் மேல், அதாவது 1,277 மாணவர்கள் கடந்த ஆண்டுகளில் பிளஸ்-2 முடித்தவர்கள். 611 மாணவர்கள் சிபிஎஸ்சி பள்ளிகளில் படித்தவர்கள்.
இதுகுறித்து கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு கூறுகையில், “நீட் தேர்வு வந்தால் இந்த நிலைதான் ஏற்படும் என்று சொன்னோம். அதுதான் நடந்துள்ளது. இதில் ஆச்சர்யப்படுவதற்கு ஒன்றுமில்லை. நீட் தேர்வை ரத்து செய்வது ஒன்றுதான் இதற்கு ஒரே தீர்வு. நீட் தேர்வு எழுத வயது வரம்பு தளர்த்தப்பட்டுள்ளது. இதனால், 18 வயது மாணவர்களுடன் வயது முதிர்ந்த மாணவர்கள் போட்டியிடும் நிலை ஏற்படும். இதனால், சமநிலை கடுமையாக பாதிக்கப்படும். அறிவுள்ள, சேவை மனப்பான்மை கொண்ட மாணவர்கள் உள்ளே நுழைய முடியாத நிலை ஏற்படும். நீட் தேர்வை விட தேசிய மருத்துவ ஆணைய மசோதா இன்னும் மோசமான பின் விளைவுகளை ஏற்படுத்தும்” என்றார்.