தமிழகத்தின் அண்டை மாவட்டமான இடுக்கி மாவட்டத்தில் நெகிழ்ச்சியான சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. இடுக்கி மாவட்டம் தொடுபுழா அருகே கரிங்குன்னம் தொடக்கப்பள்ளியில் தற்காலிக ஆசிரியராக இருப்பவர் கே.ஆர்.அம்ரிதா. கடந்த ஐந்து ஆண்டுகளாய், தினக்கூலி அடிப்படையில் பணியாற்றும் இந்த ஆசிரியை கேரள அரசு தேர்வாணையத்தில் தேர்வெழுதி, காத்திருப்போர் பட்டியலில் உள்ளவர். காலியிடம் வந்தால் தனக்கு முன்னுரிமை வழங்கப்படும், நிரந்தர ஆசிரியர் பணி கிடைக்கும் என்ற கனவுகளோடு வலம் வந்தார்.
இந்நிலையில், பள்ளி மாணவ மாணவியரை அடித்து துன்புறுத்துவதாக வந்த புகாரின் அடிப்படியில் அவரையும் அவருடன் பணிபுரிந்த மற்றொரு தற்காலிக ஆசிரியையும் பணி நீக்கம் செய்து இடுக்கி மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் அப்புண்ணி உத்தரவு பிறப்பித்தார். நேரடியாக உத்தரவு கடிதத்தோடு வந்த அவர், ஆசிரியை அம்ரிதாவிடம் கொடுத்துள்ளார்.
விவரம் கேட்ட ஆசிரியை அம்ரிதாவிடம், மாணவ மாணவியரை அடித்து துன்புறுத்துவதாக வந்த புகாரின் அடிப்படையில் இந்த பணி நீக்க உத்தரவு பிறப்பித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். பணி நீக்க ஆணையை வாங்கிக்கொண்ட ஆசிரியை அம்ரிதா, கடிதத்தோடு தனது வகுப்பறைக்கு சென்று அழுதுள்ளார். என்னெவென்று கேட்ட மாணவர்களிடம் “இனி நான் உங்களுக்கு டீச்சர் இல்லை. என்னை வேலையில் இருந்து நீக்கிவிட்டார்கள்,” எனக் கூறியுள்ளார்.
இதையடுத்து பள்ளியில் இருந்து ஆசிரியை அம்ரிதா அழுதுகொண்டே வெளியேறினார். ”எங்களை விட்டு போகாதீங்க டீச்சர்” என கூக்குரல் இட்டவாறு, ஆசிரியையை கட்டியணைத்த மாணவ மாணவியரை இதர ஆசிரியர்களும், பெற்றோர் ஆசிரியர் சங்கத்தினரும் இணைந்து, விலக்கி விட்டனர். ஆசிரியை அம்ரிதாவை பள்ளியிலிருந்து வெளியே செல்ல வழிவிட்டனர்.
இந்த சம்பவம் பள்ளி முழுக்க பரவ, பள்ளியின் மேல் தளம், கீழ் தளம், சுற்றுப்புறச்சுவர் என அனைத்து பகுதியிலும் நின்று கொண்டு ஒட்டுமொத்த மாணவ மாணவியரும் கதறி அழுது துடித்தனர். “எங்களுக்கு அம்ரிதா டீச்சர் வேண்டும்… அவர் யாரையும் இதுவரை அடித்ததில்லை, அவர் எங்களுக்கு வேண்டும்… எங்களை விட்டு போகாதீர்கள் டீச்சர்” என கூறி அழுத மாணவ மாணவியரின் கதறல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
இதுகுறித்து ஆசிரியை அம்ரிதா கூறும்போது, “மூத்த ஆசிரியர் ஒருவர் என்னைப்போன்ற மற்றொரு தற்காலிக ஆசிரியை வகுப்பிற்கு சென்று ஆபாசமாக திட்டினார். அதை கேட்க நான் சென்றேன். அப்போது மூத்த ஆசிரியர் நாங்கள் தலைமையாசிரியரின் கையாள் என்று கூறி திட்டினார். இதையடுத்து மாவட்ட கல்வி அதிகாரி வந்தபோது, இதுபோன்று தலைமையாசிரியரின் கையாள் என்ற தவறான முத்திரை மூத்த ஆசிரியர்களிடம் உள்ளதாகவும், அந்த போக்கை மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் கடிதம் கொடுத்தேன். அந்த பிரச்னை அதோடு முடிந்துபோனது.
தற்போது, தொடக்க கல்வி அலுவலர் கடிதம் கொடுத்தனர். பணி நீக்க உத்தரவு என கூறினர். வகுப்பிற்கு சென்ற நான், என்ன காரணம் என கேட்டேன். நானும், மற்றொமொரு தற்காலிக ஆசிரியையும் இங்குள்ள மாணவ மாணவியரை துன்புறுத்துவதாக வந்த புகாரின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறினார்.
நான் கேரள அரசு பணியாளர் தேர்வாணைய தேர்ச்சி பட்டியலில் உள்ளேன். இந்த சம்பவங்களால் எனக்கு யாரும் வேலை கொடுக்கமாட்டார்கள். ஐந்தாண்டுகளாக தினச்சம்பள அடிப்படையில் வேலை செய்கிறேன். எந்த பள்ளிக்கு போனாலும் எனக்கு இந்த சம்பவத்தால் வேலை கிடைக்காது. அரசு வேலைக்கு அழைக்கும்போதும் விசாரணையின்போது இந்த சம்பவம் தெரிந்தால் எனக்கு வேலை கிடைக்காது. என்ன செய்வதென்றே தெரியவில்லை. இத்தனை கஷ்டப்பட்டு படித்த எனக்கு இனி வேலைக்கான கனவு முழுக்க தகர்ந்து விட்டது,” என கதறினார் அம்ருதா.