தமிழ்நாடு

மின்விளக்கில் வாயுகசிவு: ஒரே நேரத்தில் ஏகப்பட்ட மாணவர்களுக்கு கண் பாதிப்பு

Rasus

நெல்லை மாவட்டம் ஏர்வாடியில் நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு ‌கண்களில் ஏற்பட்டுள்ள பாதிப்பு ஓரிரு நாட்களில் குணமாகிவிடும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

நெல்லை மாவட்டம் ஏர்வாடியில் உள்‌ள தனியார் பள்ளியில் ஆண்டு விழா நடைபெற்றிருக்கிறது. இதற்காக வீரியம் அதிகம் உள்ள மின் விளக்குகளை பயன்படுத்தியிருக்கின்றனர். இதனால் விழாவில் பங்கேற்ற 60 மாணவர்கள் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு கண்களில் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. இரவு முழுக்க கண் எரிச்சலால் அவர்கள் சிரமப்பட்டிருக்கின்றனர். சிலருக்கு கண்கள் வீங்கிக் கொண்டுபோனது. ஒரே நேரத்தில் அதிகப்படியானோருக்கு கண்களில் பாதிப்பு ஏற்பட்டதால் அப்பகுதி மக்கள் கலக்கம் அடைந்தனர். இதனையடுத்து பாதிக்கப்பட்ட பள்ளி மாணவர்கள் நெல்லையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

பரிசோதனையில்‌, பள்ளி ஆண்டு விழாவிற்கு பயன்படுத்‌தப்பட்ட மின்விளக்குகளில் இருந்து வாயு கசிவு ஏற்பட்டதால் கண் எரிச்சல் ஏற்பட்டது என தெரியவந்துள்ளது. மேலும் பாதிக்கப்பட்டவர்களை ‌‌மாவட்ட ஆட்சியர், கோட்டாட்சியர், சார் ஆட்சியர் ஆகியோர் நேரில் சந்தித்து நலம் விசாரித்தனர். அப்போது, மாணவர்களின் கண் பார்வைத் திறனில் எந்தப் பாதிப்பும் இல்லை என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து பேசிய நெல்லை மாவட்ட ஆட்சிய சந்தீப் தந்தூரி, “பள்ளி மாணவர்களுக்கு கண்களில் ஏற்பட்டிருக்கும் பாதிப்பு தற்காலிகமானதுதான். விரைவில் சரியாகிவிடும் என மருத்துவர்கள் தெரிவித்தனர்” என்று கூறினார். பாதிக்கப்பட்ட மாணவர்களை மருத்துவமனையில் நேரில் சந்தித்து நலம் விசாரித்த பின்னர் அவர் இதனை தெரிவித்தார்.