தமிழ்நாடு

தடையை மீறி ‘பஸ் டே’ கொண்டாடிய மாணவர்கள்

webteam

சென்னையில் தடையை மீறி கல்லூரி மாணவர்கள் ‘பஸ் டே’ கொண்டாடியதால் பரபரப்பு ஏற்பட்டது.

பொதுவாக பஸ் டே என்றாலே கல்லூரி மாணவர்களுக்கு உற்சாகம் தான். அந்த நாளில் பஸ்-ஐ அழகாக பூக்களால் அலங்கரிப்பார்கள். முன்பக்கம் மாலைகளை தொங்கவிடுவார்கள். பஸ்ஸின் மேற்கூரையில் ஏறி தாரைப் தப்பட்டை முழுங்க, ஆக்ரோஷமாக கத்துவார்கள். பஸ் அவர்கள் வழக்கமாக கல்லூரி செல்லும் பாதையில் பயணிக்கும். இதனால் மாணவர்கள் என்னதான் உற்சாகம் அடைந்தாலும் பொதுமக்களுக்கு பாதிப்பு தான். எத்தனையோ ஆம்புலன்ஸ், பள்ளிக் குழந்தைகள் செல்லும் சாலையில் மாணவர்கள் கத்திக்கொண்டு செல்வது என்பது அவர்களுக்கு சிரமத்தையே ஏற்படுத்தும். இதோடு மட்டுமில்லாமல் ‘பஸ் டே’ கொண்டாடும் மாணவர்களுக்கு இடையிலும் கூட சில பிரச்னைகள் வரலாம். கைகளில் பிடி இல்லாமல் மேற்கூரையில் மாணவர்கள் பயணிக்கும்போது தவறி விழந்து கூட விபத்து ஏற்படும் வாய்ப்பு உண்டு. மகிழ்ச்சியை தாண்டி இதில் பல சிரமமும் இருக்கிறது.

பல்வேறு பிரச்னைகளை கருத்தில் கொண்டுதான் கல்லூரி மாணவர்கள் ‘பஸ் டே’ கொண்டாட சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது. தடையை மீறும் மாணவர்களை கைது செய்யவும் உயர்நீதிமன்றம் தன் உத்தரவில் கூறியுள்ளது.

இந்நிலையில் தடையை மீறி மாநிலக் கல்லூரி மாணவர்கள் இன்று ‘பஸ் டே’ கொண்டாடினர். பஸ்-ஐ அலங்கரித்து, அதிக சத்தத்துடன் கூச்சலிட்டு பெல்ஸ் சாலையில் அவர்கள் உற்சாகமாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். ஆனால் ‘பஸ் டே’ கொண்டாட தடை இருப்பதால் போலீசார் அவர்களை விரட்டினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.