சென்னையின் கூவம் நதிக்கரை ஓரம் இருந்த குடிசை ஒன்றில் வாழ்ந்து வந்த அந்த மாணவியின் குடும்பத்தை பெரும்பாக்கத்தில் உள்ள குடிசை மாற்று வாரிய கட்டிடத்திற்குக் குடியேற்றியது அரசாங்கம். அப்போது அந்த மாணவி பத்தாம் வகுப்பை முடித்திருந்தார். அங்கு மாறுதலாகி வந்ததிலிருந்தே வீட்டு வேலைகளை ஓவர் டைமாக செய்தபடி படிப்பிலும் கவனம் செலுத்தினார். அப்படியே இரண்டு ஆண்டுகள் கடந்த நிலையில் இன்று வெளியான +2 தேர்வு முடிவில் 492 மதிப்பெண்களை பெற்றுள்ளார்.
அவர் பெயர் கீர்த்தனா. வயது பதினேழு. திருவேற்காட்டில் இருந்து நாற்பது கிலோ மீட்டர் தொலைவுள்ள பெரும்பாக்கத்திற்கு அவரது குடும்பம் குடி பெயர்ந்தது. அதனால் அதுவரை அவரது பெற்றோர்கள் பார்த்து வந்த வேலையை இழந்தனர்.
வாழ்வாதாரத்தை மீட்டெடுப்பதற்காக புதிதாகக் குடியேறிய பகுதியிலேயே சிறிய அளவில் மளிகைக் கடையை நடத்த ஆரம்பித்தனர். அதிகாலை முதல் இரவு வரை கடையிலேயே நேரத்தை அவர்கள் செலவிட்டதால் கீர்த்தனா பள்ளி செல்லும் நேரம் போக மீதமிருக்கும் நேரத்தில் வீட்டு வேலைகளையும் செய்ய வேண்டியிருந்தது. இதில் சமையல் வேலையும் அடங்கும். அதோடு பள்ளி பாடத்தையும் படித்தாக வேண்டும். ஒரே நேரத்தில் இரண்டு டாஸ்க்.
முதல் டாஸ்க்கான சமையல் வேலையில் ஓரளவு தேர்ச்சி பெற்றாலும் இரண்டாவது டாஸ்க்கான படிப்பிலும் கைத்தேர்ந்தவர் ஆனார். ‘நான் சின்ன வயசில் இருந்தே நல்லா படிப்பேன். அதனால ட்யூஷன்லாம் போகம வீட்டிலேயே படிச்சேன். நல்ல மார்க் எடுப்பேன்னு நம்பிக்கையோடு இருந்தேன். அது வீண்போகல. ஸ்கூலுக்கு போற நாட்கள்ல இரவு நேரத்துல வீட்டு வேலைகள பாப்பேன். பத்து பாத்திரம் தேய்கிறதுல ஆரம்பிச்சு சமையல் செய்யுற வர இதுல அடங்கும். லீவ் நாள்ல இந்த வேலைய நாள் முழுக்க செய்ய வேண்டியிருக்கும்.
காலையில அஞ்சு மணிக்கெல்லாம் படிக்க ஆரம்பிப்பேன். நைட் நேரத்துல ஒன்பது மணி வரப் படிப்பேன். வீட்டுல யாரும் இல்லாத நேரத்த எனக்கு சாதகமா பயன்படுத்திகிட்டு படிச்சேன். இப்போ நிறைவான மார்க் எடுத்திருக்கேன். பட்டய கணக்கர் ஆகணும்னு விரும்புறேன்’ என தெரிவித்துள்ளார் அவர்.