திருச்சி NIT pt web
தமிழ்நாடு

திருச்சி NIT விடுதியில் மாணவிக்கு பாலியல் அத்துமீறல்.. விடிய விடிய போராட்டம் நடத்திய மாணவர்கள்

PT WEB

திருச்சியில் WE WANT JUSTICE

உயர்கல்வி பயிலும் மாணவிகளின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கும் சம்பவம் திருச்சி என்.ஐ.டி. கல்லூரி விடுதியில் நடந்துள்ளது. விடுதியில் இருந்த மாணவியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட ஒப்பந்தப் பணியாளர் கைது செய்யப்பட்டுள்ளார். உரிய பாதுகாப்பு கேட்டு மாணவ, மாணவிகள் உள்ளிருப்புப் போராட்டம் நடத்தினர்.

WE WANT JUSTICE என்ற குரல்கள், திருச்சி திருவெறும்பூர் அருகே உள்ள என்ஐடி கல்லூரி வளாகத்திலும் எதிரொலித்தது. சக மாணவிக்கு நடந்த பாலியல் அத்துமீறலை கண்டித்து மாணவ, மாணவிகள் நீதி கேட்டு எழுப்பிய குரல்தான் அது. மத்திய மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த கல்லூரியின் மகளிர் விடுதியில், இண்டர்நெட்சேவை அளிப்பதற்கான கருவியை பொறுத்தும் பணிகள் கடந்த ஒரு வாரமாக நடந்து வருகின்றன.

விடிய விடிய நடந்த போராட்டம்

இப்பணிகளுக்காக வந்த கல்லூரி ஒப்பந்த பணியாளர் கதிரேசன், நேற்று காலை 9.30 மணி அளவில் மாணவி ஒருவரின் அறைக்குள் சென்று பாலியல் அத்துமீறலில் ஈடுபட முயன்றுள்ளார். அதிர்ச்சி அடைந்து மாணவி, அலறியபடியே வெளியே ஓடி வந்து நடந்தது குறித்து சக மாணவ மாணவிகளிடம் கூறியுள்ளார். புகார் அளிக்க மாணவிகள் வெளியே செல்ல அனுமதிக்கப்படாத நிலையில், தனது பெற்றோருக்கு தகவல் கொடுத்தார்.

இதன் அடிப்படையில் மாணவியின் பெற்றோர், திருவெறும்பூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். அதன் அடிப்படையில் கதிரேசன் கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

விடுதி வார்டன், பொறுப்பாளர் யாரும் இல்லாமல் அந்த ஒப்பந்தப் பணியாளர் அறைக்குள் சென்றது எப்படி? என்று கேள்வி எழுப்பிய மாணவர்கள், இந்த சம்பவம் பற்றி வார்டனிடம் கூறியபோது அவர், அந்த மாணவியை பார்த்து இப்படி உடை அணிந்தால் அப்படித்தான் ஆகும் என்று விமர்சித்துள்ளதையும் கேள்வி எழுப்புகிறார்கள்.

கல்லூரியின் நிர்வாகத்தையும் வார்டனையும் கண்டித்து விடுதியின் முன் திரண்டு மாணவ, மாணவியர் விடிய விடிய போராட்டத்தில் ஈடுபட்டனர். துவாக்குடி காவல்துறையினர் மாணாக்கரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இவற்றை ஏற்காத மாணவிகள், கல்லூரி இயக்குனர் அகிலாவின் வீட்டை முற்றுகையிட்டனர்.

உறுதியளித்த எஸ்பி

விடுதியின் பெண் காப்பாளர்களை மாற்ற வேண்டும், மூன்று காப்பாளர்களும் பாதிக்கப்பட்ட மாணவியிடம் மன்னிப்பு கோர வேண்டும், காப்பாளர் உடன் இல்லாமல் வெளிநபர்களை அனுமதிக்கக் கூடாது என்பது உள்ளிட்ட 13 கோரிக்கைகளை மாணவர்கள் என்ஐடி இயக்குனரிடம் வைத்தனர். அதன் பின்னரும் போராட்டத்தை கைவிடாத மாணவ, மாணவியர், விடுதியின் முன்பாகவும், பின்னர் கல்லுரி நுழைவுவாயில் முன்பாகவும் போராட்டத்தைத் தொடர்ந்தனர்.

அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியும் போராட்டத்தை கைவிடாத மாணவர்களை எஸ்பி வருண்குமார் சமாதானப்படுத்த முயற்சித்தார். அவரிடம் மாணவிகள் தங்கள் பிரச்னைகளை தெரிவித்தனர். இதனைத்தொடர்ந்து, இயக்குனர், விடுதி காப்பாளர் பேபி ஆகியோரிடம் பேசிய எஸ்பி., மாணவிகளின் கோரிக்கை நியாயமானது எனக்கூறி, விடுதி காப்பாளரை மன்னிப்பு கேட்க வைத்தார். எஸ்பியின் உறுதியை அடுத்து மாணவர்கள் தங்கள் போராட்டத்தை கைவிட்டனர்.