கைது செய்யப்பட்ட நபர் pt web
தமிழ்நாடு

மார்பிங் புகைப்படங்கள்மூலம் மாணவர் மிரட்டல்; தடுக்க ஓடிவந்த நண்பர்கள்..வீட்டில் சடலமாக கிடந்த மாணவி!

புகைப்படங்களை ஆபாசமாக மார்ஃபிங் செய்து மிரட்டியதால் கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஜெ.அன்பரசன்

சென்னையில் 17 வயது கல்லூரி மாணவி ஒருவர், இன்ஸ்டாவில் தனது புகைப்படத்தை மார்பிங் செய்து இளைஞர் ஒருவர் மிரட்டியதால் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 25 ம் தேதி மதியம் கல்லூரியில் இருந்து வீட்டுக்கு திரும்பிய மாணவி தனது அறைக்குள் சென்று தாழிட்டுக்கொண்டார். சிறிது நேரத்தில் கல்லூரியில் இருந்து மாணவியின் நண்பர்கள் பதட்டத்துடன் மாணவியின் வீட்டிற்கு ஓடிவந்துள்ளனர். மாணவியின் அக்கா “ஏன் பரபரப்பாக வருகிறீர்கள்?” என கேட்ட பொழுது, கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொள்வதாக தங்களுக்கு மொபைல் போனில் தெரிவித்ததாகவும் அதனால் உடனடியாக அவரை பார்க்க வேண்டும் எனவும் நண்பர்கள் கூறியுள்ளனர்.

வீட்டில் தற்கொலை

இதனையடுத்து மாணவியின் அக்காவும் மாணவியின் நண்பர்களும் நீண்ட நேரமாக கதவைத் தட்டியும் திறக்காததால், கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது, மாணவி சடலமாகவே மீட்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், கல்லூரி மாணவிக்கு கடந்த சில தினங்களாக இன்ஸ்டாகிராமில் மர்ம நபர் ஒருவர் ஆபாசமாக மெசேஜ் செய்து வந்தது தெரிய வந்துள்ளது. தொடர் விசாரணையில், மாணவியின் புகைப்படத்தை தவறாக சித்தரித்து மாணவிக்கு அந்நபர் அனுப்பியுள்ளார். அதோடில்லாமல், அதனை சமூக வலைதளத்தில் பதிவிட போவதாகவும் கூறி மிரட்டி வந்ததால், மாணவி மன வருத்தத்தில் இருந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்நிலையில், கடந்த 25 ம் தேதி வகுப்பில் அழுது கொண்டே இருந்த மாணவி, பின் வீட்டிற்கு செல்வதாக கூறிவிட்டு சென்றுள்ளார். பின் வீட்டிற்கு வந்தவுடன் தங்களுக்கு போன் செய்து தற்கொலை செய்து கொள்ளப்போவதாக கூறியதாக அவரின் நண்பர்கள் போலீசாரிடம் தெரிவித்துள்ளனர்.

மார்பிங் செய்யப்பட்ட புகைப்படங்களை அனுப்பில் மிரட்டல்

இதுதொடர்பாக, வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் இன்ஸ்டாகிராமில் மாணவியின் புகைப்படத்தை தவறாக சித்தரித்து மாணவிக்கு அனுப்பி மிரட்டல் விடுத்த நபர் யார்? என மாணவியின் செல்போனை ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

மிரட்டல் விடுத்த இன்ஸ்டா ஐ.டி., பயன்படுத்தப்பட்ட ஐ.பி எண்ணை ஆய்வு செய்த போது அது காரைக்குடி பகுதியைச் சேர்ந்த கல்லூரி மாணவர் ஒருவரின் மொபைல் போனில் பதிவாகி இருப்பது தெரியவந்தது.

இதனையடுத்து காரைக்குடிக்கு சென்ற காவல்துறையினர், அந்தக் கல்லூரி மாணவரை பிடித்து விசாரணை மேற்கொண்ட போது தனக்கும் இதற்கும் சம்பந்தமில்லை என தெரிவித்துள்ளார். பின், அவரது மொபைல் போனில் உள்ள சாட் ஹிஸ்டரியை பார்த்தபோது அவர் தற்கொலை செய்து கொண்ட மாணவிக்கு ஆபாச மெசேஜ் மற்றும் ஆபாச புகைப்படங்கள் அனுப்பி மிரட்டல் விடுத்தது தெரியவந்தது.

கிடுக்குப்பிடி விசாரணையில் வெளிவந்த உண்மை

இதனையடுத்து போலீசார் அந்த இளைஞரிடம் கிடுக்குபிடி விசாரணையில் ஈடுபட்டனர். முடிவில், அந்த இளைஞர் மிரட்டல் விடுத்தது தான் என ஒப்புக்கொண்டுள்ளார். பின்னர் அவரை கைது செய்து விசாரணையில் ஈடுபட்டனர். விசாரணையில் ராமநாதபுரம் மாவட்டம், சூரன்கோட்டை, மீனாட்சிபுரம் பகுதியைச் சேர்ந்த காந்திஜி (19) என்பது தெரியவந்தது.

இவர் காரைக்குடி பகுதியில் உள்ள தனியார் கல்லூரி விடுதியில் தங்கி பி.காம் மூன்றாம் ஆண்டு படித்து வருவதும் தெரியவந்தது. குறிப்பாக தற்கொலை செய்து கொண்ட கல்லூரி மாணவியின் புகைப்படத்தை இன்ஸ்டா பக்கத்தில் இருந்து டவுன்லோட் செய்து அதனை ஆபாசமாக மார்பிங் செய்து மாணவிக்கு அனுப்பியதும் அதனைத் தொடர்ந்து தனது விருப்பத்திற்கு இணங்கவில்லை என்றால் ஆபாச புகைப்படங்களை சமூக வலைதள பக்கங்களில் பதிவதுடன் குடும்ப உறுப்பினர்களுக்கும் நண்பர்களுக்கும் அனுப்புவதாக மிரட்டல் விடுத்ததும் தெரியவந்தது.

5 ஃபேக் ஐடிக்கள் வைத்திருந்த இளைஞர்

இதேபோல, ஐந்து இன்ஸ்டா ஃபேக் ஐடிகளை வைத்துக்கொண்டு பல்வேறு கல்லூரி மாணவிகளிடம் ஆபாசமாக மெசேஜ் செய்தும் மிரட்டல் விடுத்திருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக தற்கொலை செய்து கொண்ட மாணவிக்கு மூன்று மாதங்களுக்கு முன்பாக தான் முதன்முறையாக குடும்பத்தினர் செல்போன் வாங்கி கொடுத்துள்ளதும், தற்போது தான் புதிதாக செல்போன் பயன்படுத்தி வந்ததும் தெரியவந்தது. இந்த நிலையில் தான் இன்ஸ்டா பக்கத்தில் மாணவி தனது புகைப்படங்களை அப்லோடு செய்ததும் இந்த புகைப்படங்களை எடுத்து மார்பிங் செய்து மாணவிக்கு அனுப்பி, காந்திஜி மிரட்டல் விடுத்ததும் தெரியவந்துள்ளது.

மாணவி புதிதாக சமூக வலைதளத்திற்கு வந்ததால், இதனால் பெரிதும் மன உளைச்சலுக்கு உள்ளாகியுள்ளார் என்பதும் போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனையடுத்து கைது செய்யப்பட்ட கல்லூரி மாணவர் காந்திஜி, இதே போல எத்தனை பெண்களுக்கு ஆபாச மெசேஜ்கள் அனுப்பி மிரட்டல் விடுத்துள்ளார்? யார் யார் இவரால் பாதிக்கப்பட்டுள்ளார்கள்? என்பது குறித்து போலீசார் தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தற்கொலை எதற்கும் தீர்வல்ல. மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் வந்தாலோ, அதில் இருந்து விடுபடுவதற்கு தமிழக சுகாதார சேவை உதவி மையம் - 104 , சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044-24640050 ஆகிய எண்களை அழைக்கலாம்.