தேனியை சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவர், விண்வெளி படிப்பிற்காக சேமித்து வைத்த பணத்தை கொண்டு ஏழை எளிய மக்களுக்கு உதவி செய்துள்ளது நெகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
தேனியை சேர்ந்த கல்லூரி மாணவி உதய கீர்த்திகா. விண்வெளி வீராங்கணையாக வேண்டும் என்ற லட்சியத்துடன் படித்து வந்த இவருக்கு உக்ரைன் நாட்டில் உள்ள விண்வெளி ஆராய்ச்சிக் கல்லூரியில் படிக்க இடம் கிடைத்தது. இந்த படிப்பிற்காக பல லட்சம் ரூபாய் தேவைபட்டது. இது குறித்து புதியதலைமுறையில் ஏற்கெனவே செய்தி வெளியானது. இதனை அடுத்து பலர் உதய கீர்த்திகாவிற்கு பண உதவி செய்தனர்.
இந்த நிலையில், இவர் தனது முதல் கட்ட படிப்பை அண்மையில் முடித்தார். இதனையடுத்து 2 ஆம் கட்டமாக விண்வெளி வீரர்களுக்காக பைலட் பயிற்சி பெறுவதற்கு டெல்லியில் உள்ள பயிற்சி மையத்தில் பயிற்சியை தொடங்கும் நேரத்தில் கொரோனா காரணமாக தற்காலிகமாக தடைபட்டுள்ளது.
இந்நிலையில் தேனி வந்த உதய கீர்த்திகா தனக்கு கிடைத்த நிதி உதவியில் இருந்தும், பைலட் பயிற்சிக்காக சேமித்து வைத்த 4 லட்சம் ரூபாயினை , கொரோனா பாதிப்பு காரணமாக கடுமையாக பாதிக்கபட்ட ஏழை எளிய மக்களுக்கு உதவி செய்துள்ளார். அந்தத் தொகையின் மூலமாக அரிசி, பருப்பு உள்ளிட்ட மளிகை பொருள்களை வழங்கி வருகிறார்.
தேனி மாவட்டடத்தில் பகுதிகளில் உள்ள 400 குடும்பங்களுக்கு நிவாரண பொருள்களை வழங்க உள்ளதாகவும், முதல் கட்டமாக தேனி அருகில் உள்ள நரிக்குறவர் காலனியில் வசிக்கும் மக்களுக்கு நிவாரண பொருள்களை வழங்கி வருவதாக உதய கீர்த்திகா கூறினார்.