தமிழ்நாடு

அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் மீது மாணவர் போலீசில் புகார்...!

அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் மீது மாணவர் போலீசில் புகார்...!

webteam

அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் மீது பழங்குடியினர் மற்றும் தாழ்த்தப்பட்டோர் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கக்கோரி மாணவர் மசினகுடி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

நீலகிரி மாவட்டம் முதுமலை முகாமில் பராமரிக்கப்பட்டு வரும் 27 யானைகளுக்கான புத்துணர்வு முகாமை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தொடங்கி வைத்தார். அப்போது, முகாமிலுள்ள விநாயகர் கோயிலில் வளர்ப்பு யானைகள் கிரி, கிருஷ்ணா ஆகியவற்றிற்கு பூஜை செய்யும் நிகழ்வு நடைபெற்றது. அதில் பங்கேற்க கோயிலுக்குள் செல்வதற்காக தன்னுடைய காலணிகளை பழங்குடியின சிறுவர்களை அழைத்து அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கழற்ற கூறினார்.

சிறுவனை ஒருமையில் அழைத்து தனது காலணிகளை அமைச்சர் கழற்ற வைத்ததாக, குழந்தைகள் நல ஆர்வலர்கள் கண்டனம் தெரிவித்தனர். மேலும் அரசியல் கட்சியினர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இதைத்தொடர்ந்து தமது செயலில் உள்நோக்கம் எதுவும் இல்லை என அமைச்சர் விளக்கம் அளித்தார். பேரன் வயதில் இருந்த சிறுவர்களை அழைத்ததில் எந்த நோக்கமும் இல்லை எனவும் தெரிவித்தார்.

இந்நிலையில், அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் மீது பழங்குடியின மாணவன் மசினகுடி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். பழங்குடியினர் மற்றும் தாழ்த்தப்பட்டோர் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.