வடலூர் முகநூல்
தமிழ்நாடு

வடலூர் | தனியார் பள்ளியில் பயிற்சியின் போது மாணவரின் தலையில் பாய்ந்த ஈட்டி! இறுதியில் நேர்ந்த சோகம்!

வடலூரில் தனியார் பள்ளியில் பிளஸ் டூ மாணவனுக்கு ஈட்டி பயிற்சி அளிக்கும் பொழுது பத்தாம் வகுப்பு பயிலும் மாணவரின் தலையில் ஈட்டி பாய்ந்தது. இதில் மாணவர் மூளைச்சாவு அடைந்துள்ளார்.

PT WEB

செய்தியாளர்: ராஜா

வடலூரில் தனியார் பள்ளியில் பிளஸ் டூ மாணவனுக்கு ஈட்டி பயிற்சி அளிக்கும் பொழுது பத்தாம் வகுப்பு பயிலும் மாணவரின் தலையில் ஈட்டி பாய்ந்தது. இதில் மாணவர் மூளைச்சாவு அடைந்துள்ளார்.

கடலூர் மாவட்டம் வடலூரில் செயல்பட்டு வரும் தனியார் பள்ளியில் கடந்த 24 ஆம்தேதி, விளையாட்டு மைதானத்தில் மாணவர்களுக்கு ஈட்டி எறியும் பயிற்சி அளிக்கப்பட்டது. அப்போது, சிலம்ப பயிற்சியில் ஈடுபட்டிருந்த கிஷோரின் தலையில் ஈட்டி பாய்ந்துள்ளது.

இதில் படுகாயம் அடைந்த அவருக்கு, வடலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. பின்னர் சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையில் மேல்சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், சிறுவனை காப்பாற்ற இயலாது என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறுவனுக்கு மூளைச்சாவு ஏற்பட்டதால் அந்த குடும்பமே அதிர்ந்து போயிருக்கிறது.

இந்நிலையில், இச்சம்பவம் குறித்து வடலூர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர். இது குறித்து பள்ளி தாளாளரிடம் கேட்டதற்கு மாலை ஐந்து மணிக்கு சம்பவம் நடந்துள்ளதாகவும், சம்பவம் நடந்த சமயத்தில் தான் இல்லை என்றும் கூறியுள்ளார்.

சிறுவனின் தாய்

இதற்கிடையே பெற்றெடுத்த மகனின் தற்பொழுது நிலையை கண்டு துக்கம் தாங்க முடியாமல் தாய் சிவகாமி விஷம் அருந்தி, தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார். அவர், நெய்வேலியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் தற்போது மேல் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.