திருச்சி pt web
தமிழ்நாடு

திருச்சி | பலமாக அடித்த ஆசிரியர்; மனரீதியாக பாதிக்கப்பட்ட மாணவன் மருத்துவமனையில் அனுமதி

திருச்சி அருகே ஆசிரியர் பலமாக அடித்ததில் மனரீதியாக பாதிக்கப்பட்ட பள்ளி மாணவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

PT WEB

திருச்சி அருகே ஆசிரியர் பலமாக அடித்ததில் மனரீதியாக பாதிக்கப்பட்ட பள்ளி மாணவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். காஜா நகர் பகுதியை சேர்ந்த பால் வியாபாரியான இக்பால் தனது மூன்று குழந்தைகளையும் அரசு உதவி பெறும் பள்ளியில் படிக்க வைத்து வருகிறார்.

இதில் இக்பாலின் மூத்த மகன் சமூக அறிவியல் பாடத்தில் குறைவாக மதிப்பெண் எடுத்ததால் ஆசிரியர் முருகதாஸ் என்பவர் மாணவரை பலமாக அடித்ததாகக் கூறப்படுகிறது. இதனால் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் பாதிக்கப்பட்ட மாணவன் தனியார் மருத்துவமனையில் கடந்த ஒரு மாதமாக சிகிச்சை பெற்று வருவதாகக் கூறப்படுகிறது.

ஆசிரியரின் பெயரை கேட்டாலே பயத்தில் மகன் அலறுவதாக மாணவனின் தந்தை இக்பால் தெரிவித்தார். மேலும் ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பள்ளி நிர்வாகத்திடம் கடந்த ஒரு மாதமாக கூறியும் பலனில்லை என கூறினார்.

ஆசிரியர் அடித்ததில், மாணவனின் உடலில் அடி விழுந்த இடங்கள் அச்சு பதிந்து இருந்துள்ளது. மேலும் அவ்வப்போது பயத்தில் ‘அடிக்காதீங்க சார் ’என உளறிக்கொண்டே ஏதேதோ பேசுவதாகவும் சொல்லப்படுகிறது. புகாரின் அடிப்படையில் திருச்சி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உத்தரவின் பேரில் அதிகாரிகள் பள்ளி நிர்வாகத்திடமும், சம்பந்தப்பட்ட ஆசிரியரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பாதிக்கப்பட்ட மாணவனை அவரது வீட்டிற்கு சந்திக்க வரும் மாணவர்களின் நண்பர்கள், ‘இந்த ஆசிரியர் அடிப்பாரா?’ என அவ்வீட்டில் இருந்தவர்கள் கேட்டதற்கு, “ஒரு கேள்விக்கு பதில் தப்பாக சொன்னால் கூட 25 அடி அடிப்பார்” என சிறுவர்கள் தெரிவிக்கும் காட்சிகளும் வெளியாகி உள்ளது.