தமிழ்நாடு

கஞ்சா விற்பனையை கட்டுப்படுத்த கடும் நடவடிக்கை – 23 வங்கிக் கணக்குகள் முடக்கம்

கஞ்சா விற்பனையை கட்டுப்படுத்த கடும் நடவடிக்கை – 23 வங்கிக் கணக்குகள் முடக்கம்

webteam

மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில கஞ்சா விற்பனையை தடுக்க 23 கஞ்சா வியாபாரிகளின் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன.

மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த சில ஆண்டுகளாக சிறுவர்கள் மற்றும் இளைஞர்களை குறிவைத்து நடத்தப்படும் கஞ்சா விற்பனையை தடுப்பதற்கு போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டாலும்; கஞ்சா விற்பனையை கட்டுப்படுத்த முடியவில்லை.

இந்நிலையில், மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பொறுப்பில் உள்ள நிஷா, கஞ்சா விற்பனையை தடுப்பதற்கு பல்வேறு சட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். இதையடுத்து 2021 - 2022 ஆம் ஆண்டுகளில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 60 வியாபாரிகளின் சொத்துக்களை பட்டியலிட உத்தரவிட்டார்.

அதனைத் தொடர்ந்து முதற்கட்டமாக கஞ்சா வழக்குகளில் தொடர்புடைய 23 பேரின் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டன. 2-வது கட்டமாக 30 கஞ்சா வியாபாரிகளின் வங்கிக் கணக்குகளை முடக்க எஸ்பி அலுவலகம் வங்கிகளுக்கு அறிவுறுத்தல் கடிதம் அனுப்பியுள்ளது.

இதைத் தொடர்ந்து மீதமுள்ள கஞ்சா வியாபாரிகள் வங்கிக் கணக்குகளை தனிப்படையினர் ஆய்வு செய்து வருகின்றனர். இதையடுத்து கஞ்சா வியாபாரிகளிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட ஒரு கார் மற்றும் , நான்கு டூவீலர்களை நேரடியாக ஏலம்விட மாவட்ட காவல் கண்காணிப்பாளர் .நிஷா உத்தரவிட்டுள்ளதுடன், மீதமுள்ள கஞ்சா வியாபாரிகளின் வாகனங்களையும் பறிமுதல் செய்ய உத்தரவிட்டுள்ளார்.

இந்த அதிரடி நடவடிக்கையால் கஞ்சா வியாபாரிகள் கலக்கமடைந்துள்ளனர். போலீசாரின் இந்த அதிரடி நடவடிக்கையின் மூலம் மயிலாடுதுறை மாவட்டம் கஞ்சா இல்லாத மாவட்டமாக மாற வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.