தமிழ்நாடு

போலி இருப்பிட சான்று உறுதியானால் மாணவர்கள் மீது கடும் நடவடிக்கை: ராதாகிருஷ்ணன்

போலி இருப்பிட சான்று உறுதியானால் மாணவர்கள் மீது கடும் நடவடிக்கை: ராதாகிருஷ்ணன்

Rasus

மருத்துவக் கலந்தாய்வில் மாணவர்கள் போலி இருப்பிடச் சான்று வழங்கியிருப்பது உறுதி செய்யப்பட்டால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக சுகாதார செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

சென்னை சேப்பாக்கத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கேரள மருத்துவக்கல்லூரியில் படித்த மாணவர்கள், தமிழகத்தில் போலி இருப்பிடச் சான்று பெற்றதாக புகார் வந்திருப்பதாகக் கூறினார். போலி இருப்பிடச் சான்று பெற்றிருந்தால், மாணவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும்  ராதாகிருஷ்ணன் அறிவித்தார்.

தமிழகத்தில் மருத்துவப் படிப்பில் சேர்வதற்காக போலி முகவரி மூலம் கேரள மாணவர்கள் விண்ணப்பித்திருப்பதாக புகார் எழுந்தது. விழுப்புரம் மாவட்டம் செஞ்சிக்கோட்டையைச் சேர்ந்த அரசு வழக்கறிஞர் அம்ஜத் அலி என்பவர் சென்னை காவல் ஆணையரிடம் இதுதொடர்பாக புகார் அளித்தார். இதேபோல் மற்ற மாநிலத்தவர்களும் முறைகேட்டில் ஈடுபட்டிருக்கலாம் என்பதால் உரிய விசாரணை நடத்த வேண்டும் என்றும் அதில் வலியுறுத்தியிருந்தார்.

இந்த மனுவைப் பெற்ற சென்னை காவல் ஆணையர், புகார் தொடர்பாக மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளார்.