சோ. தர்மன் pt web
தமிழ்நாடு

வாழை: “என்னுடைய கதை...10 ஆண்டுகளுக்கு முன்பே எழுதியுள்ளேன்” எழுத்தாளர் சோ.தர்மன்

PT WEB

வாழை திரைப்படம் வெளியாகி பெரும் ஆதரவை பெற்று வரும் நிலையில், இதனை 10 ஆண்டுகளுக்கு முன்பே சிறுகதையாக எழுதியுள்ளதாக சாதிக்ய அகடாமி விருது பெற்ற எழுத்தாளர் சோ. தர்மன் தெரிவித்துள்ளார்.

வாழை ட்ரைலர்

இது குறித்து தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், சினிமாவுக்கு வந்ததால் வாழை கதை தற்போது கொண்டாடப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார். 10 ஆண்டுகளுக்கு முன்பே இந்த கதையை எழுதியதை நினைத்து தற்போது மகிழ்ச்சி அடைவதாக குறிப்பிட்டுள்ள சோ.தர்மன், வாழை தன்னை வாழ வைக்கவில்லை எனவும் உருக்கமாக பதிவிட்டுள்ளார்.

1999ஆம் ஆண்டு ஸ்ரீவைகுண்டம் அருகே நடைபெற்ற லாரி விபத்தை மையமாக வைத்து வாழை திரைப்படத்தை இயக்குநர் மாரிசெல்வராஜ் உருவாக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

வாழை திரைப்படத்தின் கதையை தான் ஏற்கெனவே சிறுகதையாக எழுதி விட்டதாகவும் அதை படமாக எடுக்க யாரும் தன்னிடம் அனுமதி கேட்கவில்லை என்றும் பிரபல எழுத்தாளரும் சாகித்ய அகாடெமி விருது பெற்றவருமான சோ.தர்மன் புதிய தலைமுறைக்கு பேட்டியளித்துள்ளார்.

அவர் பேசியதாவது, “என்னை சிலர் வாழை படம் பார்க்க சொன்னார்கள். ஏன் என கேட்டபோது, ‘உங்களது சிறுகதையை அப்படியே பயன்படுத்தி இருக்கிறார்’ என சொன்னார்கள். நான் குறிப்பிட்ட திரைப்படங்களை மட்டுமே பார்க்கக்கூடிய ஒரு ஆள். சரியென்று நேற்று திரைப்படம் பார்த்தேன். அது என்னுடைய வாழையடி... எனும் சிறுகதை. ஏன் வாழையடி என பெயர்வைத்து மூன்று புள்ளிகளை வைத்தேன் என்றால் வாழையடி வாழையாக குழந்தைகள் கஷ்டப்படுகிறார்கள் என்பதை குறிப்பிடத்தான் அப்படி பயன்படுத்தி இருந்தேன்.

ஒரு பிரச்னையை, ஒரு சம்பவத்தை ஒரு வடிவமாக்கி இலக்கியமாக்கி சிறுகதையாக நாவல்களாக யார் ஒருவர் முதலில் அடையாளம் கொடுத்து புத்தமாக வெளியிட்டு பதிப்புரிமை வைத்திருக்கிறார்களோ, அவருக்குத்தான் அந்த உரிமை செல்லும்” எனத் தெரிவித்துள்ளார்.