மகா விஷ்ணு pt web
தமிழ்நாடு

மகாவிஷ்ணு: வாய் வார்த்தைகளே முதலீடு.. பொருளீட்டுவதே இலக்கு.. வரவு செலவுகள் எல்லாமே வெளிநாடுகளில்...

வாய் வார்த்தைகளையே முதலீடாக போட்டிருக்கும் மகா விஷ்ணு, தாம் வெளிநாடுகளில் இருப்பதே அதிகம் என்கிறார் தனது வீடியோக்களில். அவிநாசியில் உள்ள பரம்பொருள் அறக்கட்டளையின் வரவு - செலவுகள் எல்லாமே, வெளிநாடுகளில் இருந்துதான் நிகழ்ந்துள்ளது.

PT WEB

மதுரை மகா டூ மகா விஷ்ணு

மாய வார்த்தைகளின் மூலம் உள்ளத்தில் இறங்கி வசப்படுத்தி, தன்னை மகா விஷ்ணுவாகவே ஏற்றுக் கொள்ள வைக்கும் கார்ப்பரேட் சாமியார்தான் இந்த மகா விஷ்ணு. ஸ்டேண்ட் அப் காமெடியனாக பயணத்தைத் தொடங்கிய இவர், வெளிநாடுகளில் தனது நிறுவனத்தை பதிவு செய்து கொள்ளும் அளவுக்கு மாய வளர்ச்சி கண்டுள்ளார்.

திரைப்படங்களில் மாஸ் ஹீரோக்கள் பந்தாவாக வந்திறங்குவதைப் போல, கலக்கலான தோற்றத்தில் குட்டி விமானத்தில் இருந்து இறங்கி வரும் இவர், வேறு யாருமில்லை. முன்ஜென்மம், பிறவி பயன் என்ற தேர்ந்தெடுக்கப்பட்ட வார்த்தைகளை பார்த்துப் பார்த்து பேசி, ஆன்மிக சொற்பொழிவாளர் என கூறிக் கொண்டு, திரியும் மகா விஷ்ணுதான். உள்நாட்டில் இருக்கும்போதும், ஆன்மிக சொற்பொழிவு என்று கூறிக்கொண்டு உரையாற்றும் போதும்தான், ஒயிட் அன்ட் ஒயிட் கெட் அப்பில் பாந்தமாக காட்சி தருவார். மற்ற நேரங்களில், அல்டிமேட் தோற்றத்தில்தான் இருப்பார்.

மகாவிஷ்ணு

மதுரை மகா என்ற பெயரில் ஸ்டேண்ட் அப் காமெடியனாக அறியப்பட்ட பிறகு, திரை நட்சத்திரமாக ஜொலிக்க முற்பட்டு, நான் செய்த குறும்பு திரைப்படத்தை எடுக்க முற்பட்டுள்ளார். அந்த முயற்சி கைகூடாமல் போகவே, மதுரை மகா என்ற அடையாளத்தை மகா விஷ்ணு என்று மாற்றிக் கொண்டு, யூட்யூபராகியுள்ளார். பரம்பொருள் அறக்கட்டளை திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் அலுவலகத்தைப் திறந்து, சொற்பொழிவாற்றியுள்ளார்.

செல்வத்தை ஈட்டுவதே இலக்கு

உண்மையில் இவரது இலக்கு, உள்நாட்டில் அடியார்களை சேர்ப்பதும், வெளிநாட்டில் செல்வத்தை ஈட்டுவதும்தான். இதற்காக, வெளிநாடுகளில் வசிக்கும் தமிழர்கள் மூலம், அங்குள்ள செல்வந்தர்களை நெருங்கிவிடுவார். இந்த வகையில், கனடா, ஆஸ்திரேலியா, சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட நாடுகளில், குட்டி விமானம் மூலம் பறந்து திரிகிறார். இலங்கைக்கும் பாரம்பரிய உடையில் பயணித்து தமிழ் எம்.பி.க்களை சந்தித்து, அங்கு ஆன்மிக சொற்பொழிவு நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளார். தமிழ் எம்.பி.க்கள் மூலம் இலங்கையில் உயர் பதவிகளை வகிக்கும் சிங்கள அதிகாரிகளையும் நெருங்கியுள்ளார்.

மகா விஷ்ணு

ஆன்மிக சொற்பொழிவாற்றி வந்த மகா விஷ்ணு, ஒரு கட்டத்தில் தன்னை பெருமாளின் அவதாரமாகவே சொல்லிக் கொள்கிறார். வெளிநாடுகளில் குளிரூட்டப்பட்ட கண்ணாடி அறையில்தான் இவரது நிகழ்ச்சிகள் நடக்கும். இதில் பங்கேற்க நுழைவுக்கட்டணம் வசூலிக்கிறார். ஆன்மிக சொற்பொழிவில் பங்கேற்பவர்கள் கட்டுக்கட்டாக நன்கொடையும் கொடுக்கிறார்கள்.

சொற்பொழிவு நிகழ்ச்சி, ஒரு கட்டத்தில், போதனை நிகழ்ச்சியாகி விட்டது. தற்போது கைலாசா என்ற புதிய நாட்டையே நிர்மாணித்துள்ள நித்தியானந்தா போலவே, கார்ப்பரேட் சாமியாராக உருவெடுத்துள்ளார். அவர் தங்கியிருக்கும் இடங்களில், சொகுசும் ஆடம்பரமும் நிரம்பி வழியும். திருப்பூர் - அவிநாசியை தலைமையிடமாகக் கொண்டு, தொடங்கிய பரம்பொருள் அறக்கட்டளையை, வெளிநாடுகளில் பரம்பொருள் யோகம் என்ற பெயரில் ப்ரைவேட் லிமிட்டெட் கம்பெனியாக பதிவு செய்திருக்கிறார். ஆஸ்திரேலியாவில் இந்த நிறுவனத்தை, கடந்த 3 ஆம் தேதிதான் பதிவு செய்திருக்கிறார் மகா விஷ்ணு.

வரவு செலவுகள் எல்லாமே வெளிநாடுகளில்..

வாய் வார்த்தைகளையே முதலீடாக போட்டிருக்கும் மகா விஷ்ணு, தாம் வெளிநாடுகளில் இருப்பதே அதிகம் என்கிறார் தனது வீடியோக்களில். அவிநாசியில் உள்ள பரம்பொருள் அறக்கட்டளையின் வரவு - செலவுகள் எல்லாமே, வெளிநாடுகளில் இருந்துதான் நிகழ்ந்துள்ளது.

மகா விஷ்ணு

மகா விஷ்ணு தமிழ்நாட்டில் பல்வேறு அரசியல்வாதிகளை நெருங்கி, அனைத்து துறைகளின் அலுவலகங்களிலும் சொற்பொழிவாற்றியுள்ளார். ஒரு முறை தன்னம்பிக்கை சொற்பொழிவாளர் என்று கூறி, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸை சந்தித்துள்ளார். அப்போது எடுத்த புகைப்படங்களின் மூலம் அமைச்சருக்கு நெருக்கமானவர் என்றும், அதிகார மட்டத்தில் நெருக்கமானவர் என்றும் காட்டிக் கொண்டு, பள்ளிக்கூடங்களிலும் சொற்பொழிவாற்றியுள்ளார். இப்போது அசோக் நகர் பள்ளிக்கூடத்தில் நடந்த நிகழ்ச்சியில் மகாவிஷ்ணுவின் பேச்சினால் ஏற்பட்ட சர்ச்சையே, இவை அத்தனையையும் வெளியே கொண்டு வந்துள்ளது.