கரையில் காத்திருக்கும் படகுகள் pt desk
தமிழ்நாடு

வங்கக் கடலில் புயல் சின்னம்: கடலுக்குச் செல்லாத மீனவர்கள் - கரையில் காத்திருக்கும் படகுகள்!

காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக நாகை மாவட்ட மீன்வளத்துறை மறு அறிவிப்பு வரும் வரை மீனவர்கள் கடலுக்குச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதால் 25,000-க்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்குச் செல்லவில்லை.

PT WEB

செய்தியாளர்: என்.விஷ்ணுவர்த்தன்

தென் வங்கக் கடலின் மத்திய பகுதியில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் மிதமானது முதல் கனமழை பெய்யக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இந்நிலையில், நாகை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

கரையில் காத்திருக்கும் படகுகள்

காற்றழுத்த தாழ்வு பகுதி மற்றும் அதீத கனமழை எச்சரிக்கையால் நாகை மாவட்ட விசைப்படகு மற்றும் ஃபைபர் படகு மீனவர்கள் மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்குச் செல்ல மீன்வளத்துறை தடைவிதித்துள்ளது. இதையடுத்து அக்கரைப்பேட்டை, கல்லார், கீச்சாங்குப்பம், நம்பியார் நகர், வேதாரண்யம், கோடியக்கரை, புஷ்பவனம், ஆற்காடுத்துறை உள்ளிட்ட 25 மீனவ கிராம மீனவர்கள் இன்று கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவில்லை.

இதனால் 600 விசைப்படகுகள், 3000-க்கும் மேற்பட்ட ஃபைபர் படகுகள் பாதுகாப்பாக கரையில் நிறுத்தப்பட்டுள்ளன. ஆழ்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருக்கும் மீனவர்களை உடனடியாக கரை திரும்ப தொலைத்தொடர்பு கருவி மூலம் அறிவுறுத்தப்பட்டுள்ளது. கடலில் மீன் பிடித்துக் கொண்டிருக்கும் விசைப்படகு மீனவர்கள் அவசரகதியில் கரைக்கு திரும்பி வருகின்றனர்.