தமிழ்நாடு

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கல்திட்டைகள், முதுமக்கள் தாழிகள் கண்டுபிடிப்பு

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கல்திட்டைகள், முதுமக்கள் தாழிகள் கண்டுபிடிப்பு

Sinekadhara

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கல்திட்டைகள், முதுமக்கள் தாழிகள் கண்டுபிடிக்கப்பட்டது. 

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே வன்னியம்பட்டி - சத்திரப்பட்டி சாலையின் மேற்குப்பகுதியில் உள்ள பேச்சிலாக் கிராமத்தின் அரசியார்பட்டி பகுதியில் ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைவர் ராஜகுரு தலைமையிலான குழு கள ஆய்வு செய்தது. அப்போது, புதுக்குளம் கண்மாய் தென்கலுங்கு அருகில் 3000 ஆண்டுகள் பழமையான கல்திட்டை, முதுமக்கள் தாழிகள், குத்துக்கல் ஆகியவை கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. 

பெரிய கற்களைக் கொண்டு இறந்தவர்களின் நினைவாக ஈமச்சின்னங்கள் அமைக்கப்பட்டதால் அக்காலம் ’பெருங்கற்காலம்’ எனப்படுகிறது. இக்காலத்தின் ஆரம்பத்தில் இறந்தவர்களின் உடலை ஊருக்கு வெளியே உள்ள காடுகளில் போட்டுவிடுவார்கள். அதை விலங்குகள், பறவைகள் இரையாய் கொண்டபின் இருக்கும் எலும்புகளை சேகரித்து, அதோடு ஈமப்பொருட்களையும் தாழியில் வைத்து அடக்கம் செய்வார்கள். இதைச் சுற்றி கற்களைக் கொண்டு கல்திட்டை, கற்பதுக்கை, குத்துக்கல் போன்றவற்றை அமைப்பர்.

அரசியார்பட்டியில் செம்மண் நிலத்தின் மேற்பரப்பில் அருகருகே புதைந்த நிலையில் சிறிய அளவிலான 3 முதுமக்கள் தாழிகள் கண்டறியப்பட்டன. இதில் ஒரு தாழியின் வாய்ப்பகுதியின் விட்டம் 43 செ.மீ. உள்ளது. மேற்பகுதி அரைவட்டமாக, 1 முதல் 3 அடி வரை உயரம் உள்ள சில பலகைக்கற்கள், தாழிகள் இருக்கும் பகுதியில் என தனித்தனியாகக் காணப்படுகின்றன. இவை சேதமடைந்த கல்திட்டையின் எஞ்சிய கற்கள். மேலும் 3 மீட்டர் உயரமுள்ள ஒரு குத்துக்கல் ஒன்றும் கீழே சாய்ந்த நிலையில் கிடக்கிறது. இவை சுமார் 3000 ஆண்டுகள் பழமையானவை. சுமார் 5 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள அந்தப்பகுதியின் மேற்பரப்பிலும், பாறைகளிலும் இரும்புத் தாதுக்களும், குழல் ஆதண்டை என்ற மூலிகைத் தாவரமும் காணப்படுகின்றன.