தமிழ்நாடு

கல் குவாரியில் வெடி விபத்து - 10 வயது சிறுமி உயிரிழப்பு

கல் குவாரியில் வெடி விபத்து - 10 வயது சிறுமி உயிரிழப்பு

PT

நாமக்கல் அருகே கல் குவாரியில் ஏற்பட்ட வெடி விபத்தில் 10 வயது சிறுமி பலியாகியுள்ளார்.

நாமக்கல் அடுத்துள்ள கொண்டமநாயக்கன்பட்டியில் உள்ள கல்குவாரியை சுபாஷ் என்பவர் ஒப்பந்தம் செய்து கிட்டு என்பவருக்கு குத்தகைக்கு கொடுத்துள்ளார். இங்கு வெடி வைத்து பாறைகள் தகர்க்கப்பட்டு, கற்கள், ஜல்லிகள் உடைக்கப்பட்டு வருகிறது. இந்த குவாரியில் வையப்பமலையை சேர்ந்த மூர்த்தி என்ற கல் உடைக்கும் தொழிலாளி தனது குடும்பத்துடன் தங்கி வேலை பார்த்து வருகிறார். நேற்று மாலை தொழிலாளி மூர்த்தியின் 10 வயது மகள் நந்தினியும் அவரது 5 வயது மகன் செளந்தர்ராஜனும் குவாரி பகுதியில் உள்ள குடிசை வீட்டின் அருகே விளையாடி கொண்டிருந்ததாக தெரிகிறது.

இந்நிலையில் நேற்று மாலை பாறைகளை தகர்ப்பதற்கு வெடி வைக்கப்பட்டது.அப்போது கற்கள் சிதறி இருவர் மீதும் விழுந்ததுள்ளது. இதில் சிறுமி நந்தினியின் தலை மீது கல் விழுந்ததில் அவர் உடல் சிதறி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். படுகாயமடைந்த சிறுவனை அங்கிருந்தவர்கள் மீட்டு நாமக்கல் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக கோவை அனுப்பி வைக்கப்பட்டார். இந்தச் சம்பவம் குறித்து சேந்தமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.